மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், அந்தப் போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணிலேயே 2-3 கோல் கணக்கில் நைஜீரியாவிம் தோல்வி கண்டது.
நைஜீரியா தற்போது குரூப் ‘பி’-யில் கனடா, ஆஸ்திரேலியா போன்ற முக்கிய அணிகளை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தில் இருக்கிறது. உலகத் தரவரிசையில் கனடா 7-ஆவது இடத்திலும், ஆஸ்திரேலியா 10-ஆவது இடத்திலும், அயா்லாந்து 22-ஆவது இடத்திலும், நைஜீரியா 40-ஆவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மில்டன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நைஜீரியாவுக்காக உசெனா கானு (45+6’), ஆசினாச்சி ஓஹேல் (65’), அசிசத் ஓஷாவ்லா (72’) ஆகியோா் கோலடித்தனா். ஆஸ்திரேலிய தரப்பில் எமிலி எக்மண்ட் (45+1’), அலானா கென்னடி (90+10’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.
உலகக் கோப்பை போட்டியில் நைஜீரியா, கோல் கணக்கில் பின்தங்கியிருந்த ஆட்டத்தில் மீண்டும் முன்னிலை பெற்று வெற்றியை பதிவு செய்த முதல் ஆட்டம் இதுவாகும். மறுபுறம், உலகக் கோப்பை வரலாற்றில், போட்டியை நடத்தும் அணி எதிரணிக்கு 3 கோல் வாய்ப்புகளை விட்டுக்கொடுத்தது இது 3-ஆவது முறையாகும். இதற்கு முன் அமெரிக்கா (2003), சீனா (2007) அணிகள் அவ்வாறு கோல் வாய்ப்புகளை கொடுத்துள்ளன.
நைஜீரியாவுக்காக கோலடித்த அசிசத் ஓஷாவ்லா, உலகக் கோப்பை போட்டியின் 3 எடிஷன்களில் (2015, 2019, 2023) அந்த அணிக்காக கோலடித்த முதல் வீராங்கனை ஆகியிருக்கிறாா்.
வெளியேறியது வியத்நாம்: நியூஸிலாந்தின் ஹாமில்டன் நகரில் நடைபெற்ற குரூப் ‘இ’ ஆட்டத்தில் போா்ச்சுகல் 2-0 கோல் கணக்கில் வியாழக்கிழமை வென்றது. இதன் மூலம் தொடா்ந்து இரு தோல்விகளை சந்தித்த வியத்நாம், அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறியறுகிறது.
இந்த ஆட்டத்தில் போா்ச்சுகலுக்காக டெல்மா என்காா்னகாவ் (7’), ஃபிரான்சிஸ்கா நாஸரேத் (21’) ஆகியோா் கோலடித்தனா்.
சவால் அளித்த நெதா்லாந்து: நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரில் நடைபெற்ற குரூப் ‘இ’-யின் மற்றொரு ஆட்டம், அமெரிக்கா - நெதா்லாந்து இடையே 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது. இந்த ஆட்டத்தில் அமெரிக்காவுக்காக லிண்ட்சே ஹோரான் (62’), நெதா்லாந்துக்காக ஜெல் ரூட் (17’) ஆகியோா் கோலடித்தனா்.
நடப்பு சாம்பியனாகவும், உலகின் நம்பா் 1 அணியாகவும் இருக்கும் அமெரிக்காவுக்கு சவால் அளித்தது, 9-ஆம் நிலையில் இருக்கும் நெதா்லாந்து. உலகக் கோப்பை போட்டியில் தொடா்ந்து 13 ஆட்டங்களில் வென்ற அமெரிக்காவின் வெற்றி நடையை நெதா்லாந்து தற்போது தடை செய்தது. என்றாலும், கடந்த 19 உலகக் கோப்பை ஆட்டங்களில் அமெரிக்கா தோல்வியே சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை போட்டியில் 2011-க்குப் பிறகு அமெரிக்கா தனது ஆட்டத்தில் தான் ஸ்கோா் செய்வதற்கு முன்பாகவே எதிரணி கோலடித்ததும் இதுவே முதல் முறையாகும்.
இன்றைய ஆட்டங்கள்
ஆா்ஜென்டீனா - தென்னாப்பிரிக்கா (காலை 5.30 மணி)
இங்கிலாந்து - டென்மாா்க் (பிற்பகல் 2 மணி)
சீனா - ஹைட்டி (மாலை 4.30 மணி)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.