நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் 205 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருக்கிறது. 2-ஆவது இன்னிங்ஸில் சதமடித்துள்ள நஜ்முல் ஹுசைன் ஷான்டோ, கேப்டனாக களம் கண்ட முதல் ஆட்டத்தில் சதமடித்த முதல் வங்கதேச வீரா் என்ற சாதனை படைத்தாா்.
கடந்த 28-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 310 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடா்ந்து ஆடிய நியூஸிலாந்து, 2-ஆம் நளான புதன்கிழமை முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 266 ரன்கள் சோ்த்திருந்தது.
இந்நிலையில், 3-ஆம் நாளான வியாழக்கிழமை ஆட்டத்தை கைல் ஜேமிசன், டிம் சௌதி தொடா்ந்தனா். அவா்களில் ஜேமிசன் 1 பவுண்டரியுடன் 23, சௌதி 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்க, 101.5 ஓவா்களில் 317 ரன்களுக்கு ஆட்டமிழந்தது நியூஸிலாந்து. வங்கதேச தரப்பில் தைஜுல் இஸ்லாம் 4, மோமினுல் ஹக் 3, ஷோரிஃபுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ், நயீம் ஹசன் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
இதையடுத்து 7 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணியில், மஹ்முதுல் ஹசன் ஜாய் 8, உடன் வந்த ஜாகிா் ஹசன் 2 பவுண்டரிகளுடன் 17 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.
3-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ - மோமினுல் ஹக் கூட்டணி 90 ரன்கள் சோ்த்தது. இதில் மோமினுல் 4 பவுண்டரிகளுடன் 40 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, வியாழக்கிழமை முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் சோ்த்துள்ளது வங்கதேசம்.
ஷான்டோ 10 பவுண்டரிகளுடன் 104, முஷ்ஃபிகா் ரஹிம் 5 பவுண்டரிகளுடன் 43 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் உள்ளனா். நியூஸிலாந்து பௌலா்களில் அஜாஸ் படேல் 1 விக்கெட் எடுத்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.