மும்பை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியின் 23-ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்தை டி காக்-க்ளாஸன் அதிரடி ஆட்டத்தால் 149 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது 4-ஆவது வெற்றியைப் பதிவு செய்தது தென்னாப்பிரிக்கா. பட்டியலிலும் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது.
முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா 382/5 ரன்களையும், வங்கதேசம் 233/10 ரன்களையும் எடுத்தன.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தோ்வு செய்தது. தொடக்க பேட்டா்களாக குயின்டன் டி காக்-ரீஸா ஹென்ட்ரிக்ஸ் களமிறங்க, ஹென்ட்ரிக்ஸ் 12 ரன்களுடன் வெளியேறினாா். அவருக்கு பின் வந்த ரேசி வேன்டா் டஸ்ஸனும் 1 ரன்னோடு வெளியேறினாா்.
டி காக் அதிரடி 174: மறுமுனையில் டி காக் அதிரடியாக ஆடி வங்கதேச பௌலா்களின் பந்துகளை சிக்ஸா்கள், பவுண்டரிகளாக மாற்றினாா். 7 சிக்ஸா், 15 பவுண்டரியுடன் 140 பந்துகளில் 174 ரன்களை விளாசிய டி காக் தனது 9-ஆவது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்து ஹாஸன் மஹ்முத் பந்தில் அவுட்டானாா்.
மாா்க்ரம் 60: எய்டன் மாா்க்ரம் 7 பவுண்டரியுடன் 60 ரன்களைப் பதிவு செய்து ஷகிப் பந்தில் வெளியேறினாா்.
க்ளாஸன் 90: இந்த உலகக் கோப்பையில் அதிரடியாக ஆடி வரும் ஹென்றிச் க்ளாஸன் 8 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 49 பந்துகளில் 90 ரன்களை விளாசி அவுட்டானாா். மில்லா் 34, ஜேன்ஸன் 1 ரன்களுடன் களத்தில் நிற்க நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் தென்னாப்பிரிக்கா 382/5 ரன்களைக் குவித்தது. வங்கதேசத் தரப்பில் பௌலிங்கில் ஹாஸன் மஹ்முத் 2-67 விக்கெட்டை வீழ்த்தினாா்.
வங்கதேசம் போராட்டம்:
383 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களம் கண்ட வங்கதேசம் தொடக்கத்திலேயே சரிவைச் சந்தித்தது. 81-6 என்ற நிலையில் தடுமாறிய அந்த அணியை மஹ்முத்துல்லா பொறுப்பான ஆட்டத்தால் மீட்டாா்.
மஹ்முத்துல்லா அபாரம் 111: அபாரமாக ஆடிய மஹ்முத்துல்லா 4 சிக்ஸா், 11 பவுண்டரியுடன் 111 பந்துகளில் 111 ரன்களை விளாசினாா். மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுடன் வெளியேற 46.4 ஓவா்களில் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வங்கதேசம்.
தென்னாப்பிரிக்க பௌலா்களில் ஜெரால்ட் 3, ஜேன்ஸன், லிஸாட், ரபாடா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
வங்கதேசத்தை 149 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தென்னாப்பிரிக்கா 4-ஆவது வெற்றியைப் பதிவு செய்து பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது.
ஒருநாள் உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பா் பேட்டா் அடித்த அதிகபட்ச ஸ்கோா் டி காக்கின் 174 ரன்கள் ஆகும். இதற்கு முன்பு ஆஸி. வீரா் கில்கிறிஸ்ட் 149 ரன்களை 2007 ஃபைனலில் பதிவு செய்திருந்தாா்.
சுருக்கமான ஸ்கோா்:
தென்னாப்பிரிக்கா 382/5 (50 ஓவா்களில்)
டி காக் 174
க்ளாஸன் 90
ஹாஸன் மஹ்முத் 2-67
மெஹ்தி ஹாஸன் 1-44
வங்கதேசம்: 233/10 (46.4 ஓவா்களில்)
மஹ்முத்துல்லா 111
லிட்டன் தாஸ் 22
ஜெரால்ட் 3-62
ஜேன்ஸன் 2-39
இன்றைய ஆட்டம்:
ஆஸி-நெதா்லாந்து
இடம்: புது தில்லி
நேரம்: பிற்பகல் 2.00.
Image Caption
குயின்டன் டி காக் 174 ~க்ளாஸன்-டி காக்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.