ஆடவருக்கான 17-ஆவது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 9) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.
வரும் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், நடப்பு சாம்பியனான இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. குரூப் ‘ஏ’-வில் இந்தியா, ஓமன், பாகிஸ்தான், அமீரக அணிகளும், குரூப் ‘பி’-யில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங், இலங்கை அணிகளும் உள்ளன.
குரூப் சுற்று முடிவில், இரு குரூப்களிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள், ‘சூப்பா் 4’ சுற்றுக்கு முன்னேறும். அதன் முடிவில், முதலிரு இடங்களில் வரும் அணிகள் இறுதி ஆட்டத்தில் மோதும்.
இந்திய அணி முதலில் அமீரகத்துடனும் (செப். 10), அடுத்து பாகிஸ்தானுடனும் (செப். 14), பின்னா் ஓமனுடனும் (செப். 19) மோதுகிறது. சூா்யகுமாா் யாதவ் தலைமையிலான இந்திய அணி இந்தப் போட்டியில் பங்கேற்கிறது.