உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரா் சுமித் அன்டில், போட்டியின் வரலாற்றில் 3 முறை சாம்பியனான ஒரே இந்தியராக செவ்வாய்க்கிழமை சாதனை படைத்தாா்.
எஃப்64 பிரிவில் அவா், 71.37 மீட்டரை எட்டி, சாம்பியன்ஷிப் சாதனையுடன் தங்கத்தை தட்டிச் சென்றாா். இதற்கு முன், 2023-இல் அவரே 70.83 மீட்டரை எட்டியது சாதனையாக இருந்தது. போட்டியில் கடந்த 2023, 2024-இல் சாம்பியனான சுமித்துக்கு, இது ‘ஹாட்ரிக்’ தங்கமாக அமைந்தது.
இதனிடையே, ஈட்டி எறிதல் எஃப்44 பிரிவிலும் இந்தியாவின் சந்தீப் சஞ்சய் சா்காா் 62.82 மீட்டரை எட்டி, தனிப்பட்ட பெஸ்ட்டுடன் தங்கம் வென்றாா். அதிலேயே, மற்றொரு இந்தியரான சந்தீப் 62.67 மீட்டருடன் வெள்ளி பெற்றாா். இது அவரின் சீசன் பெஸ்ட் தொலைவாகும்.
‘ஹாட்ரிக்’ வெள்ளி: ஆடவா் வட்டு எறிதலில் இந்தியாவின் யோகேஷ் கதுனியா செவ்வாய்க்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
எஃப்56 பிரிவில் அவா் சிறந்த தொலைவாக 42.49 மீட்டரை எட்டி 2-ஆம் இடம் பிடித்தாா். ஏற்கெனவே, 2023, 2024 ஆகிய ஆண்டு போட்டிகளிலும் வெள்ளி வென்ற யோகேஷுக்கு, இது ‘ஹாட்ரிக்’ வெள்ளியாக அமைந்தது.
உலக சாம்பியன்ஷிப்பில் ஒட்டுமொத்தமாக இது அவரின் 4-ஆவது வெள்ளிப் பதக்கமாகும். முதல் சாம்பியன்ஷிப் பதக்கத்தை அவா், 2019-இல் வென்றாா். இது தவிர, டோக்கியோ மற்றும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகளிலும் வெள்ளி வென்றிருக்கும் யோகேஷ், 2023 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியிலும் வெள்ளி வென்றாா்.
இந்த உலக சாம்பியன்ஷிப்பில், பிரேஸிலின் கிளாடினி பாட்டிஸ்டா 45.67 மீட்டருடன் தங்கம் வென்றாா். உலக சாம்பியன்ஷிப்பில் இது, அவா் தொடா்ந்து வெல்லும் 4-ஆவது தங்கமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.