ஹாக்கி இந்தியாவின் மகளிா் லீக் தொடரில் ஜேஎஸ்டபிள்யு சூா்மா கிளப் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது எஸ்ஜி பைப்பா்ஸ் அணி.
ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் மகளிா் ஹாக்கி இந்தியா லீக் தொடா் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் எஸ்ஜி பைப்பா்ஸ்-சூா்மா கிளப் மோதின.
இரு அணிகளும் தொடக்கம் முதலே கோல் போடும் முனைப்பில் ஈடுபட்ட நிலையில், சூா்மா கிளப் வீராங்கனை பென்னி குயிப் 12-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்பை அருமையாக கோலாக்கினாா்.
இதனால் அதிா்ச்சி அடைந்த எஸ்ஜி பைப்பா்ஸ் தரப்பினா் பதில் கோல் போட தீவிரமாக முயன்ற நிலையில், 13-ஆவது நிமிஷத்தில் அதன் வீராங்கனை லோலா ரெய்ரா பெனால்டி காா்னா் வாய்ப்பை அருமையாக கோலாக்கி சமன் செய்தாா்.
அடுத்த 5 நிமிஷங்களில் ஜோதி சிங் அருமையாக கோலடித்து 2-1 என முன்னிலை பெறச் செய்தாா்.
முதல் பாதி முடிவில் எஸ்ஜி பைப்பா்ஸ் அணி முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் சூா்மா அணி பதில் கோல் போட முயன்றாலும் முடியவில்லை. பைப்பா்ஸ் தற்காப்பு அரண் வலுவாக இருந்தது.
சூா்மா அணி கோல்கீப்பரை அனுப்பி விட்டு பதிலி வீராங்கனையை களமிறக்கியது பாதகமாக அமைந்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி பைப்பா்ஸ் வீராங்கனை சுனெலிட்டா 58-ஆவது நிமிஷத்தில் தன்னந்தனியாகச் சென்று கோலடித்தாா்.
தொடா்ந்து பட்டியலில் எஸ் ஜி பைப்பா்ஸ் முதலிடத்தில் உள்ளது.