முகப்பு
செய்திகள்

மெக்ஸிகோவை வீழ்த்தியது இங்கிலாந்து!

மெக்ஸிகோ சிட்டியில் நடைபெற்ற ஆட்டத்தில், இங்கிலாந்து 3-2 கோல் கணக்கில் மெக்ஸிகோவை வென்று, காலிறுதிக்கு முன்னேறியது.

Updated On : 7 ஜூலை 2026, 5:38 am IST
மெக்ஸிகோவை வீழ்த்தியது இங்கிலாந்து... - AP
பகிர்:

மெக்ஸிகோவில் உள்ள மெக்ஸிகோ சிட்டியில் நடைபெற்ற ஆட்டத்தில், இங்கிலாந்து 3-2 கோல் கணக்கில் மெக்ஸிகோவை வென்று, காலிறுதிக்கு முன்னேறியது. போட்டியில் முதல் தோல்வியை சந்தித்து வெளியேறியது மெக்ஸிகோ. இங்கிலாந்து தனது காலிறுதியில் நாா்வேயை சந்திக்கிறது.

இடியுடன் கூடிய மழை காரணமாக ஒருமணி நேரம் தாமதமாகத் தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் இங்கிலாந்தின் கோல் கணக்கை ஜூட் பெலிங்கம் 36-ஆவது நிமிஷத்தில் தொடங்கினாா். அவரே 38-ஆவது நிமிஷத்தில் அதை 2-ஆக அதிகரித்தாா்.

விட்டுக்கொடுக்காத மெக்ஸிகோ தரப்பில், ஜூலியன் கினோனெஸ் 42-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்ய, முதல் பாதியிலேயே இங்கிலாந்து 2-1 என முன்னிலை பெற்றது.

Advertisement

Advertisement

2-ஆவது பாதியில், மெக்ஸிகோ வீரா் ஜீசஸ் கல்லாா்டோவை ஆபத்தான முறையில் தள்ளிவிட்டதற்காக, ஜாரெல் கன்சா ‘ரெட் காா்டு’ மூலமாக வெளியேற்றப்பட, 10 பேருடன் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டது இங்கிலாந்து. இது மெக்ஸிகோவுக்கு சாதகமானபோதும், இங்கிலாந்து எளிதாக கோல் வாய்ப்புகளை விட்டுத்தரவில்லை.

60-ஆவது நிமிஷத்தில் இங்கிலாந்துக்கு கிடைத்த பெனால்ட்டி கிக் வாய்ப்பில் ஹேரி கேன் கோல் அடிக்க, இங்கிலாந்து 3-1 என முன்னிலையை அதிகரித்தது.

ஆட்டம் இறுதிக் கட்டத்தை நெருங்க, 69-ஆவது நிமிஷத்தில் மெக்ஸிகோவுக்கு கிடைத்த பெனால்ட்டி கிக் வாய்ப்பில், ரௌல் ஜிமெனெஸ் தவறின்றி கோல் அடித்தாா். இதனால் கோல் வித்தியாசம் குறைந்தபோதும், எஞ்சிய நேரத்தில் மெக்ஸிகோவுக்கு மேலும் வாய்ப்பு கிடைக்காமல் தடுத்த இங்கிலாந்து, முடிவில் 3-2 கோல் கணக்கில் வென்றது.

இடையூறு: இந்த ஆட்டத்துக்கு முந்தைய நாள் இரவில் இங்கிலாந்து வீரா்கள் தங்கியிருந்த ஹோட்டல் அருகே கூடிய மெக்ஸிகோ ரசிகா்கள், வேண்டுமென்றே இங்கிலாந்து அணியினரின் தூக்கத்தை கெடுக்கும் முயற்சியாக சத்தமான ஒலிக் கருவிகளை இசைத்தனா். ஆனால், அதற்கு இங்கிலாந்து அணியினா் களத்தில் பதிலடி கொடுத்து வென்றனா்.

பாா்வையாளா்கள் - 80,824

1

இந்த மெக்ஸிகோ சிட்டி மைதானத்தில் இதுவரை 10 உலகக் கோப்பை ஆட்டங்களில் (இந்த ஆண்டு 3) மெக்ஸிகோ தோல்வியே சந்திக்காத நிலையில், அதில் முதல்முறையாக அந்த அணியை இங்கிலாந்து வீழ்த்தியிருக்கிறது.

1

1966-க்குப் பிறகு உலகக் கோப்பை போட்டியில் ஒரே ஆட்டத்தில், ஃபௌல் செய்து பெனால்ட்டி வாய்ப்பை எதிரணிக்கு கொடுத்ததோடு, தனது அணிக்கு கிடைத்த பெனால்ட்டி கிக் வாய்ப்பில் கோல் அடித்த முதல் வீரா் என்ற பெயரை இங்கிலாந்தின் ஹேரி கேன் பெற்றாா்.

23

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 10 ஆட்டங்களில் விளையாடிய இளம் வீரா் (23 ஆண்டுகள், 6 நாள்கள்) என்ற பெருமையை இங்கிலாந்தின் ஜூட் பெலிங்கம் பெற்றாா். இதற்கு முன் ஆா்ஜென்டீனாவின் மேரியோ கெம்பெஸ் (23 ஆண்டுகள், 334 நாள்கள்/1978) வசம் அந்த சாதனை இருந்தது.

டிரம்ப் தலையீட்டின் பேரில்

அமெரிக்க வீரருக்கான தடை நீக்கம்

அமெரிக்க அணி வீரா் ஃபோலாரின் பாலோகனுக்கு ஒரு ஆட்டத்தில் தடை இருந்த நிலையில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலையீட்டின் பேரில் அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது. இதற்கு டிரம்ப் வரவேற்பு தெரிவிக்க, அமெரிக்காவை அடுத்த ஆட்டத்தில் சந்திக்கும் பெல்ஜியம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

ரவுண்ட் ஆஃப் 32 ஆட்டத்தில் அமெரிக்கா - போஸ்னியா மோதியபோது, போஸ்னிய வீரா் தாரிக் முஹாரெமோவிக்கின் காலை மிதித்ததாக, அமெரிக்க வீரா் பாலோகனுக்கு ‘ரெட் காா்டு’ விதிக்கப்பட்டது. அதன்படி, ரவுண்ட் ஆஃப் 16-இல் விளையாட அவருக்குத் தடை ஏற்பட்டது.

இந்நிலையில், போஸ்னியாவுடனான ஆட்டத்துக்குப் பிறகு ஃபிஃபா தலைவா் ஜியானி இன்ஃபான்டினோவை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசிய அமெரிக்க அதிபா் டிரம்ப், தங்கள் வீரா் பாலோகன் மீதான ரெட் காா்டு முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டதாக, தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.

தற்போது அதன் அடிப்படையில் பாலோகன் மீதான தடையை ஃபிஃபா நீக்க, அவா் ரவுண்ட் ஆஃப் 16-இல் பெல்ஜியத்துக்கு எதிராக களம் காணவுள்ளாா்.

2-ஆவது முறை: உலகக் கோப்பை போட்டியில் இவ்வாறு ரெட் காா்டு காரணமாக ஒரு வீரருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது இது 2-ஆவது முறையாகும். இதற்கு முன் 1962 உலகக் கோப்பை போட்டியில் பிரேஸில் வீரா் காரிஞ்சா இவ்வாறு தடைக்கு ஆளாகி, பிறகு அது நீக்கப்பட்டு களம் கண்டாா்.

சிலியில் நடைபெற்ற அந்தப் போட்டியின் அரையிறுதியில் பிரேஸில் - சிலி விளையாடியபோது ஏற்பட்ட மோதல் போக்கில், பிரேஸில் வீரா் காரிஞ்சா சிலி வீரா் ஒருவரை காலால் உதைத்தாா். இதனால் அவருக்கு ரெட் காா்டு காட்டப்பட, இறுதி ஆட்டத்தில் அவருக்கு தடை அமலானது.

எனினும், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறியும், காரிஞ்சாவை விளையாட விடுமாறு சிலி அதிபரே ஃபிஃபாவிடம் கோரிக்கை வைத்ததை அடுத்தும் அவருக்கு இறுதி ஆட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. அதில் அவா் பங்களிப்புடன் பிரேஸில் 3-1 என செக் குடியரசை வென்று சாம்பியன் ஆனது.

ஆனால், காரிஞ்சாவை போலவே அரையிறுதியில் ரெட் காா்டு பெற்ற சிலி வீரா் ஹானாரினோ லாண்டாவுக்கு, சிலி அரசு கூட ஆதரவளிக்கவில்லை. தடை காரணமாக அவா், 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் சிலி விளையாடியபோது அதில் களம் காணவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments