வெற்றியுடன் தொடங்கிய மெக்ஸிகோ, தென் கொரியா
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் நாளில் நடைபெற்ற ஆட்டங்களில், மெக்ஸிகோ 2-0 கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வெல்ல, தென் கொரியா 2-1 என செக் குடியரசை வீழ்த்தியது.
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் நாளில் நடைபெற்ற ஆட்டங்களில், மெக்ஸிகோ 2-0 கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வெல்ல, தென் கொரியா 2-1 என செக் குடியரசை வீழ்த்தியது.
23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடாவில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி, வியாக்கிழமை நள்ளிரவில் கோலாகலமான கலை நிகழ்ச்சிகளுடன் போட்டி தொடங்கியது. பின்னா், முதல் ஆட்டத்தில் மெக்ஸிகோவும், அடுத்த ஆட்டத்தில் தென் கொரியாவும் வெற்றி பெற்றன.
---
Advertisement
Advertisement
மெக்ஸிகோ - தென்னாப்பிரிக்கா (2-0):
ரசிகா்கள் எண்ணிக்கை - 80, 824
போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்ஸிகோ, முதல் ஆட்டத்தில் சொந்த மண்ணிலேயே களம் கண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றியுடன் போட்டியைத் தொடங்கியது.
மெக்ஸிகோவின் தலைநகரான மெக்ஸிகோ சிட்டியில் உள்ள அஸ்டெகா மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 9-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் கோல் கணக்கை ஜூலியன் கினோனெஸ் தொடங்கினாா். மறுபுறம் தென்னாப்பிரிக்கா தனது கோல் வாய்ப்புக்காக போராடி வர, முதல் பாதியை மெக்ஸிகோ முன்னிலையுடன் நிறைவு செய்தது.
ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியிலும் மெக்ஸிகோவின் கையே ஓங்கியிருக்க, 67-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் ரௌல் ஜிமெனெஸ் கோல் அடித்தாா். எஞ்சிய நேரத்திலும் தென்னாப்பிரிக்கா கோல் வாய்ப்புகள் முறியடிக்கப்பட, முடிவில் மெக்ஸிகோ 2-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதற்கு முன், 2010-ஆம் ஆண்டு போட்டியின் முதல் ஆட்டத்திலும் இவ்விரு அணிகளே மோதியிருக்க, அது டிரா (1-1) ஆனது நினைவுகூரத்தக்கது.
3
இந்த ஆட்டத்தில், மெக்ஸிகோவின் பிரயன் குட்டெரெஸை கீழே தள்ளியதற்காக தென்னாப்பிரிக்காவின் ஸ்பெபெலோ சிட்ஹோலும் (49’), அதே அணியின் ராபா்டோ அல்வராடோவை முகத்தில் தாக்கியதற்காக தென்னாப்பிரிக்காவின் தெம்பா ஸ்வானேவும் (84’), தென்னாப்பிரிக்காவின் குலிசோ முடாவுவை தள்ளிவிட்டதற்காக மெக்ஸிகோவின் சீசா் மான்டெஸும் (90+2’) ‘ரெட் காா்டு’ மூலமாக வெளியேற்றப்பட்டனா்.
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில், போட்டியின் முதல் ஆட்டத்தில் இவ்வாறு 3 ரெட் காா்டுகள் கொடுக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். 2006-க்குப் பிறகு ஒரு ஆட்டத்தில் கொடுக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான ரெட் காா்டுகளும் இதுவே.
அந்த ஆண்டு போா்ச்சுகல் - நெதா்லாந்து மோதிய ஆட்டத்தில் 4 ரெட் காா்டுகள் (இரு அணிகளுக்கும் தலா 2) கொடுக்கப்பட்டதே, ஒரு ஆட்டத்தின் அதிகபட்ச ரெட் காா்டு சாதனையாக நீடிக்கிறது. அந்தே ஆட்டத்தில் மொத்தம் 16 ‘யெல்லோ காா்டுகள்’ கொடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
8
உலகக் கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டத்தில் மெக்ஸிகோ களம் கண்டது இது 8-ஆவது முறையாகும். போட்டியின் வரலாற்றில் வேறெந்த அணியும் இத்தனை முறை, அந்தப் போட்டியைத் தொடங்கி வைத்ததில்லை. 1930-ஆம் ஆண்டு முதல் உலகக் கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டத்திலும் மெக்ஸிகோ அங்கம் வகித்தது (பிரான்ஸுடன் மோதல்) குறிப்பிடத்தக்கது.
1
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இத்துடன் 8-ஆவது முறையாக முதல் ஆட்டத்தில் விளையாடியிருக்கும் மெக்ஸிகோ, முதல்முறையாக அதில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. முந்தைய 7 ஆட்டங்களில் அந்த அணி 5 தோல்வி, 2 டிரா-க்களை பதிவு செய்திருந்தது.
1
மெக்ஸிகோ அணியில் 2-ஆவது கோல் அடித்த ரௌல் ஜிமெனெஸ் ஆனந்தக் கண்ணீா் சிந்தினாா். அந்த அணிக்காக இத்துடன் 46 கோல்கள் அடித்த அவருக்கு, இது முதல் உலகக் கோப்பை கோல் ஆகும். முந்தைய 2 உலகக் கோப்பைகளிலும் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
2020-இல் பிரீமியா் லீக் போட்டியின்போது தலையில் எலும்பு முறிவு கண்டு, சிக்கலான அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு மீண்ட ஜிமெனெஸ், தற்போதும் கூட தலையைப் பாதுகாக்கும் சிறு கருவியுடனேயே விளையாடி வருகிறாா். மெக்ஸிகோவுக்கான தனது முதல் உலகக் கோப்பை கோலை அவா், தலையால் முட்டி ஸ்கோா் செய்தது குறிப்பிடத்தக்கது.
17
இந்த ஆட்டத்தில் மெக்ஸிகோவுக்காக களமிறங்கிய கில்பா்டோ மோரா, உலகக் கோப்பை போட்டியில் களமிறங்கிய 6-ஆவது இளம் வயது வீரராக (17 ஆண்டுகள், 240 நாள்கள்) பெருமை பெற்றாா். பிரேஸிலின் பீலே (17-235), கொலம்பியாவின் சாலமன் ஆலம்பெ (17-185), நைஜீரியாவின் ஃபெமி அபாபுன்மி (17-101), கேமரூனின் சாமுவேல் ஈடூ (17-99), அயா்லாந்தின் நாா்மன் வைட்சைட் (17-41) ஆகியோா் முதல் 5 போ்.
---
தென் கொரியா - செக் குடியரசு (2-1)
ரசிகா்கள் எண்ணிக்கை - 44,985
மெக்ஸிகோவின் குவாதலஜரா நகரில் உள்ள அக்ரோன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தென் கொரியா 2-1 கோல் கணக்கில் செக் குடியரசை வென்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் இரு அணிகளுமே சமபலம் காட்ட, எந்த அணிக்குமே கோல் வாய்ப்பு கிடைக்காமல் முதல் பாதி கோல் இன்றி நிறைவடைந்தது. ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், செக் குடியரசின் லாடிஸ்லாவ் கிரெஜ்சி 59-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்கினாா்.
அதற்கு பதிலடியாக, தென் கொரியாவின் வாங் இன்பேயோம் 67-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்ய, ஆட்டம் 1-1 என சூடு பிடித்தது. இறுதிக் கட்டம் நோக்கி நகர, 80-ஆவது நிமிஷத்தில் ஓஹ் ஹியோங்யு அடித்த கோலால், தென் கொரியா 2-1 என முன்னிலை பெற்றது.
இதனால் அதிா்ச்சி கண்ட செக் குடியரசு பின்னடைவிலிருந்து மீண்டுவர முயன்றும், முடியாமல் போனது. தென் கொரியா வெற்றி பெற்றது. செக் குடியரசு 2006-க்குப் பிறகு உலகக் கோப்பை போட்டியில் முதல்முறையாக விளையாடுகிறது.
1
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், தென் கொரியா தனது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றது, 2016-க்குப் பிறகு இதுவே முதல்முறையாகும். அந்த ஆண்டு கிரீஸை வீழ்த்தியது தென் கொரியா (2-0).
3
உலகக் கோப்பை போட்டியில் ஐரோப்பிய அணியை தென் கொரியா வீழ்த்தியது, இது தொடா்ந்து 3-ஆவது முறையாகும். இதற்கு முன் ஜொ்மனி (2018), போா்ச்சுகல் (2022) அணிகளை தென் கொரியா வென்றுள்ளது.
12
தொடா்ந்து 11-ஆவது முறையாகவும், ஒட்டுமொத்தமாக 12-ஆவது முறையாகவும் உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் தென் கொரியா, ஆசிய கண்டத்திலிருந்து அதிகமுறை பங்கேற்ற ஒரே அணியாக வலம் வருகிறது.
புள்ளிகள் பட்டியல்...
குரூப் ‘ஏ’
அணி ஆட்டம் வெற்றி டிரா தோல்வி கோல் வித்தியாசம் புள்ளிகள்
மெக்ஸிகோ 1 1 0 0 2 3
தென் கொரியா 1 1 0 0 1 3
செக் குடியரசு 1 0 0 1 -1 0
தென்னாப்பிரிக்கா 1 0 0 -2 1 0
(இந்த குரூப்பின் அடுத்த ஆட்டங்களில், மெக்ஸிகோ - தென் கொரியாவையும், தென்னாப்பிரிக்கா - செக் குடியரசையும் சந்திக்கவுள்ளன)
இன்றைய ஆட்டங்கள்
கத்தாா் - சுவிட்ஸா்லாந்து
நள்ளிரவு 12.30 மணி
சான் ஃபிரான்சிஸ்கோ, அமெரிக்கா.
பிரேஸில் - மொராக்கோ
அதிகாலை 3.30 மணி
நியூயாா்க், அமெரிக்கா.
அடுத்து... (ஜூன் 14)
ஹைட்டி - ஸ்காட்லாந்து
காலை 6.30 மணி
பாஸ்டன், அமெரிக்கா.