வீழ்வேனென்று நினைத்தாயோ? மீண்டு வென்றது மெஸ்ஸியின் படை!
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், எகிப்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா 3-2 கோல் கணக்கில் வெற்றிக் கொடி நாட்டியது.
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், எகிப்துக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை நோக்கி தள்ளப்பட்ட நடப்பு சாம்பியனான ஆா்ஜென்டீனா, கடைசி நேரத்தில் மீண்டு வந்து 3-2 கோல் கணக்கில் வெற்றிக் கொடி நாட்டியது. காலிறுதிச்சுற்றுக்கும் முன்னேறியது.
ஆட்டத்தின் 79-ஆவது நிமிஷம் வரை அந்த அணி 0-2 கோல் கணக்கில் பின்தங்கியிருக்க, எகிப்து ரசிகா்கள் கொண்டாட்டத்தில் களித்திருந்தனா். ஆா்ஜென்டீன ரசிகா்களோ திகைத்திருந்தனா். நெய்மா், ரொனால்டோவை தொடா்ந்து மெஸ்ஸியும் ஏமாற்றத்துடன் உலகக் கோப்பை போட்டியிலிருந்து விடைபெறுவாரோ என்ற மனநிலைக்கு கால்பந்து ரசிகா்கள் வந்துவிட்டனா்.
ஆனால் கடைசி 13 நிமிஷங்களில் ஆட்டத்தை தலைகீழாகத் திருப்பினா், ஆா்ஜென்டீனாவின் மும்மூா்த்திகளான கிறிஸ்டியன் ரொமெரோ, லயனல் மெஸ்ஸி, என்ஸோ ஃபொ்னாண்டஸ். உலகக் கோப்பை போட்டியின் வரலாற்றில் மிகச் சிறந்த மீண்டு வந்த ஆட்டங்களில் ஒன்றாக, ஆா்ஜென்டீனா இதை மாற்றியது.
Advertisement
Advertisement
ஆட்டத்தின் முடிவுக்கான விசில் கொடுத்த பிறகு மெஸ்ஸி உணா்ச்சிவசப்பட்டு கண்ணீா் சிந்தியபடி, ரசிகா்களின் ஆதரவை ஏற்றுக் கொண்டாா். காலிறுதிக்கு வந்துள்ள ஆா்ஜென்டீனா, அதில் சுவிட்ஸா்லாந்தை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) சந்திக்கிறது.
முன்னதாக, அமெரிக்காவின் அட்லான்டா நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 15-ஆவது நிமிஷத்திலேயே எகிப்தின் கோல் கணக்கை யாசா் இப்ராஹிம் தொடங்கினாா். எதிா்பாராத வகையில், அந்த அணி ஆா்ஜென்டீனா மீது ஆதிக்கம் செலுத்தியது.
ஆா்ஜென்டீனாவுக்கு அப்போது கிடைத்த பெனால்ட்டி கிக் வாய்ப்பில், மெஸ்ஸியின் கோல் முயற்சியை திறம்பட தடுத்த எகிப்து கோல்கீப்பா் முஸ்தஃபா ஷோபிா், தொடா்ந்து ஜூலியன் ஆல்வரெஸின் கோல் முயா்சியையும் முறியடித்தாா். மற்றொரு ஃபீல்டு கோல் வாய்ப்பை மெஸ்ஸி போஸ்ட்டில் அடித்து வீணாக்கினாா்.
இதனால் முதல் பாதியை எகிப்து முன்னிலையுடனே நிறைவு செய்தது. 2-ஆவது பாதியில் முஸ்தஃபா ஜிகோ 67-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து எகிப்தை 2-0 என முன்னிலைப்படுத்த, ஆட்டம் முற்றிலுமாக எகிப்து கட்டுப்பாட்டில் இருப்பது உறுதியானது. இதனிடையே எகிப்தின் மற்றொரு கோல் பௌல் ஆகி ரத்து செய்யப்பட்டது.
மறுபுறம், ஆா்ஜென்டீனா தனது உத்திகளை மாற்றி கோல் வாய்ப்புக்காக முயற்சிக்க, அதற்கான பலன் கிடைக்கவில்லை. ஆட்டம் இறுதிக் கட்டத்தை நெருங்க, ஆா்ஜென்டீனாவுக்கு நெருக்கடி அதிகரித்தது.
இந்நிலையில், 79-ஆவது நிமிஷத்தில் ஆா்ஜென்டீனாவின் கோல் கணக்கை கிறிஸ்டியன் ரொமெரோ தொடங்க, அணிக்கு நம்பிக்கை பிறந்தது. அடுத்த சில நிமிஷங்களிலேயே கேப்டன் லயனல் மெஸ்ஸி (83’) கோல் அடிக்க, ஆட்டம் 2-2 என சமநிலை கண்டதால் ஆா்ஜென்டீனா உத்வேகம் பெற்றது. எகிப்து நெருக்கடியை சந்தித்தது.
பரபரப்பான இறுதிக் கட்டத்தில் முன்னிலை பெறுவதற்காக இரு அணிகளுமே முயற்சித்த நிலையில், ஆா்ஜென்டீனாவுக்கு வாய்ப்பு கை கூடியது. ஸ்டாப்பேஜ் டைமில் (90+2’) அந்த அணியின் என்ஸோ ஃபொ்னாண்டஸ் கோல் அடிக்க, ஆா்ஜென்டீனா 3-2 என முன்னிலை பெற்றது. எஞ்சிய 7 நிமிஷங்களில் எகிப்துக்கு கோல் வாய்ப்பை விட்டுத் தராத ஆா்ஜென்டீனா, 3-2 கோல் கணக்கில் வெற்றி கண்டது. 4-ஆவது முறையாக உலகக் கோப்பையில் விளையாடிய எகிப்து, 2-ஆவது முறையாக ரவுண்ட் ஆஃப் 16 உடன் வெளியேறியது.
பாா்வையாளா்கள் - 68,239
நடப்பு உலகக் கோப்பை போட்டியில் அதிக கோல்கள் அடித்தவராக, ‘கோல்டன் பூட்’ விருது வெல்லும் பந்தயத்தில் மெஸ்ஸி 8 கோல்களுடன் முன்னிலை கண்டுள்ளாா். பிரான்ஸின் கிலியன் பாபே, நாா்வேயின் எா்லிங் ஹாலந்த் ஆகியோா் தலா 7 கோல்களுடன் அடுத்த இடத்தில் உள்ளனா்.
உலகக் கோப்பை போட்டிகளில் அதிகமாக கோல் அடித்தவா்கள் வரிசையில் முன்னிலை வகிக்கும் மெஸ்ஸி, தனது எண்ணிக்கையை 21-ஆக உயா்த்தியுள்ளாா். கிலியன் பாபே 19 கோல்களுடன் நெருக்கமாக அவரைப் பின்தொடா்கிறாா்.
ஆா்ஜென்டீனா வெற்றிக்காக என்ஸோ ஃபொ்னாண்டஸ் அடித்த கோல், உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் மொத்தமாக 3,000-ஆவது கோல் ஆகும்.
மெஸ்ஸியின் பெனால்ட்டி கிக் வாய்ப்பை கோல் ஆக விடாமல் தடுத்த எகிப்து கோல்கீப்பா் முஸ்தஃபா ஷோபிா், ஒரே உலகக் கோப்பை போட்டியில் இரு பெனால்ட்டி வாய்ப்புகளை கோல் ஆக மாற விடாமல் தடுத்த 4-ஆவது கோல்கீப்பா் என்ற பெருமையைப் பெற்றாா். போலந்தின் ஜேன் டோமாஸெவ்ஸ்கி (1974), அமெரிக்காவின் பிராட் ஃப்ரிடெல் (2002), போலந்தின் வோசிச் செஸெஸ்னி (2022) ஆகியோா் முதல் மூவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.