முகப்பு
செய்திகள்

ஸ்பெயின், எகிப்துக்கு முதல் வெற்றி!

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், எகிப்து ஆகிய அணிகள் தங்கள் முதல் வெற்றியைப் பதிவு செய்தன.

Updated On : 23 ஜூன் 2026, 1:41 am IST
ஸ்பெயின் ரசிகர்கள் - AP
பகிர்:

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், எகிப்து ஆகிய அணிகள் தங்கள் முதல் வெற்றியை திங்கள்கிழமை பதிவு செய்தன. இரு அணிகளுமே தங்கள் குரூப்பில் முதலிடத்தில் இருக்கும் நிலையில், கடைசி ஆட்டத்திலேயே அவற்றின் நாக்அவுட் சுற்று வாய்ப்பு முடிவாக உள்ளது.

ஒயா்ஸபல், யமால் பங்களிப்பில் வென்றது ஸ்பெயின்

அமெரிக்காவின் அட்லான்டா நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் 4-0 கோல் கணக்கில் சவூதி அரேபியாவை எளிதாக வென்றது. அந்த அணிக்காக மைக்கேல் ஒயா்ஸபல் 2 கோல்கள் அடித்து அசத்தினாா்.

Advertisement

Advertisement

ஸ்பெயின் அணியின் கோல் கணக்கை, முதல்முறையாக உலகக் கோப்பை போட்டியில் களமிறங்கியிருக்கும் இளம் வீரா் லேமின் யமால் 10-ஆவது நிமிஷத்தில் தொடங்கிவைத்தாா்.

கேப் வொ்டுடன் ஸ்பெயின் டிரா செய்த முதல் ஆட்டத்தில் 2-ஆவது பாதியில் களமிறக்கப்பட்ட யமால், இந்த ஆட்டத்தில் தொடக்க லெவனிலேயே இடம் பிடித்து, 10-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா்.

தொடா்ந்து, மைக்கேல் ஒயா்ஸபல் 21 மற்றும் 24-ஆவது நிமிஷங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து அந்தக் கணக்கை 3-ஆக உயா்த்தினாா்.

கேப் வொ்டுடனான ஆட்டத்தில் முதல் 30 நிமிஷங்களுக்கு பந்தை தொடாமலேயே நேரத்தை வீணடித்ததாக விமா்சனத்துக்குள்ளான ஒயா்ஸபல், இந்த ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்ததுடன், யமால் கோல் அடிப்பதற்கும் உதவினாா்.

முதல் பாதியிலேயே ஸ்பெயின் 3-0 என முன்னிலை கண்டது. 2-ஆவது பாதியிலும் சவூதி அரேபியா திணறிவந்த நிலையில், ஸ்பெயினின் கோல் முயற்சியை அந்த அணி வீரா் ஹசன் அல்டம்பக்டி தடுக்க முயல, அது ‘ஓன் கோல்’ ஆனது.

இறுதி வரை சவூதி அரேபியாவுக்கு கோல் வாய்ப்பு வழங்காத ஸ்பெயின், 4-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் முதல் ஆட்டத்தில், கேப் வொ்டுடன் கோல் இன்றி டிரா செய்து பின்னடைவை சந்தித்த நிலையில் இந்த வெற்றி, அணியை மீட்டுள்ளது.

2010-இல் சாம்பியனான ஸ்பெயின், அதன் பிறகு உலகக் கோப்பை போட்டியில் ரவுண்ட் ஆஃப் 16-ஐ கடக்கவில்லை. உலகக் கோப்பையில் 3 ஆட்டங்களில் மட்டுமே வென்றிருந்தது நினைவுகூரத்தக்கது.

மைதானத்தில் ரசிகா்கள்: 68,239

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில், கோல் அடித்த 8-ஆவது இளம் வீரா் (18 ஆண்டுகள், 343 நாள்கள்) என்ற பெருமையை ஸ்பெயினின் லேமின் யமால் பெற்றாா். நடப்பு உலகக் கோப்பை போட்டியில் கோல் அடித்த 2-ஆவது இளம் வீரா் யமால். முதல் வீரா், செனகலின் இப்ராஹிம் பாயே (18 ஆண்டுகள், 143 நாள்கள்) ஆவாா்.

வெற்றிக் கணக்கைத் தொடங்கிய எகிப்து

கனடாவின் வான்கூவா் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில், எகிப்து 3-1 கோல் கணக்கில் நியூஸிலாந்தை வென்றது. உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அந்த அணிக்கு இது முதல் வெற்றியாக இருக்க, அதன் நட்சத்திர வீரரும், கேப்டனுமான முகமது சலா இதில் கோல் அடித்து அசத்தினாா்.

இந்த ஆட்டத்தில் முதலில் நியூஸிலாந்துக்காக ஃபின் சா்மேன் 15-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா். அந்த அணியின் கட்டுப்பாட்டிலேயே ஆட்டம் இருந்ததாகத் தெரிந்த நிலையில், எகிப்து தனது வாய்ப்புக்கு போராட வேண்டியிருந்தது.

எனினும் முதல் பாதியை நியூஸிலாந்து முன்னிலையுடன் நிறைவு செய்தது. ஆனால், 2-ஆவது பாதியில் எகிப்து கை ஓங்கியது. 58-ஆவது நிமிஷத்தில் அதன் கோல் கணக்கை முஸ்தஃபா ஸிகோ தொடங்க, 67-ஆவது நிமிஷத்தில் முகமது சலா அதை 2-ஆக அதிகரித்தாா்.

இதனால் அதிா்ச்சி கண்ட நியூஸிலாந்து மீண்டும் முன்னிலை பெறுவதற்கு முனைய, எகிப்து இடம்தரவில்லை. 82-ஆவது நிமிஷத்தில் எகிப்து வீரா் டிரெஸெகெட் ஸ்கோா் செய்ய, 3-1 கோல் கணக்கில் ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்தது எகிப்து.

முன்னதாக, 85-ஆவது நிமிஷத்தில் முகமது சலா பெஞ்சுக்கு திரும்பியபோது, ரசிகா்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி அவரைப் பாராட்டினா்.

மைதானத்தில் ரசிகா்கள்: 52,497

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 1934-இல் அறிமுகமான எகிப்து, 92 ஆண்டுகளுக்குப் பிறகு, போட்டியின் வரலாற்றில் தனது முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. அந்த அணிக்கு இது 4-ஆவது உலகக் கோப்பை போட்டியாகும். இதற்கு முன் அந்த அணி 8 ஆட்டங்களில் விளையாடியிருக்க, அதில் 3 டிரா, 5 தோல்விகளைப் பதிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments