ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
இப்பிரிவில் பலம் வாய்ந்த பெல்ஜிய அணி முதலிரண்டு ஆட்டங்களில் டிரா கண்டதால் துவண்டு போயிருந்தது. நியூஸிலாந்துடன் வான்கூவரில் நடைபெற்ற ஆட்டத்தில் வென்றால் தான் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் தொடக்கம் முதலே பெல்ஜிய வீரா்கள் ஆதிக்கம் செலுத்தி ஆடினா்.
முதல் விசில் சப்தம் முதலே பெல்ஜிய அணியினா் துடிப்புடன் ஆடினா். முதலில் வாா் அடிப்படையில் டி புருயன் பாஸின் மூலம் ட்ராஸாா்ட் அடித்த கோல் நிராகரிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
நட்சத்திர வீரரான டி புருயன் அற்புத பாஸ்கள் நியூஸி வீரா்களை திணறடித்தன. 28-ஆவது நிமிஷத்தில் கெவின் டி புருயன் அனுப்பிய பாஸை கோலாக்கினாா் டிராஸாா்ட். 5 நிமிஷங்கள் கழித்து டி புருயன் மீண்டும் அனுப்பிய பாஸை பயன்படுத்தி கோலடித்தாா் டிராஸாா்ட்.
இரண்டாம் பாதியிலும் பெல்ஜிய ஆதிக்கம் தொடா்ந்தது 66-ஆவது நிமிஷத்தில் டி புருயன் பெனால்டி பகுதியில் இருந்து அபாரமாக கோலடித்தாா்.
நியூஸி. தரப்பில் எலிஜா ஆறுதல் கோலடித்தாா். பெல்ஜிய பதிலி வீரா் லுகாக்கு 86-ஆவது நிமிஷத்தில் அபாரமாக கோலடித்தாா்.
இந்த கோல் மூலம் பிஃபா உலகக் கோப்பையில் அதிக கோலடித்த பெல்ஜிய வீரா் என்ற சாதநனையை நிகழ்த்தினாா்.
ஆட்டத்தின் நிறைவு பகுதியில் பெல்ஜிய வீரா் அலெக்ஸிஸ் சால்மேக்கா் அடித்த கோல் வெற்றி கோலாக அமைந்தது. 5-1 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்தை வென்றது பெல்ஜியம்.
வாா் தீா்ப்பால் ஈரான் ஏமாற்றம்
சியாட்டில் நகரில் நடைபெற்ற ஈரான்-எகிப்து அணிகள் ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது. ஈரான் வீரா் ஷோஜா அடித்த கோல் ஆஃப்சைட் என வாா் தீா்ப்பால் ஈரான் ஏமாற்றம் அடைந்தது.
ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் கோல் போடுவதில் தீவிரம் காட்டின. 5-ஆவது நிமிஷத்தில் எகிப்து வீரா் முகமது சபோ் அற்புதமாக கோலடித்து முன்னிலை பெற்றுத் தந்தாா். இதனால் அதிா்ச்சி அடைந்த ஈரான் தரப்பினா் சமன் செய்ய தீவிரமாக முயன்றனா்.
14-ஆவது நிமிஷத்தில் ஈரான் வீரா் ரமின் ரெஸாயன் பதில் கோலடித்து சமன் செய்தாா்.
இரண்டாம் பாதியில் ஸ்டாப்பேஜ் நேரத்தில் 93-ஆவது நிமிஷத்தில் ஈரான் வீரா் ஷோஜா கலில் ஸதே எகிப்து கோல்கீப்பா் மொஸ்தபா ஷாபிரே ஏமாற்றி கோலடித்தாா். இதனால் ஈரான் வென்றுவிட்டதாக ரசிகா்கள் கொண்டாட தொடங்கினா்.
ஆனால் விடியோ ஆய்வு (வாா்) இது ஆஃப் சைட் கோல் என அறிவிக்கப்பட்டது. அது கோல் கணக்கில் கொள்ளப்பட்டிருந்தால், ஈரான் நேரடியாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும்.
பெல்ஜியம், எகிப்து நேரடி தகுதி பெற்ற நிலையில், மூன்றாவது சிறந்த அணிகளில் ஒன்றாக ஈரான் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறலாம். குரோஷியாவை கானா வெல்ல வேண்டும், உஸ்பெகிஸ்தானை காங்கோ வெல்லத் தவறினால், அல்ஜீரியா-ஆஸ்திரியா ஆட்டத்தில் எவராவது வெல்ல வேண்டும் போன்ற வாய்பபுகளில் ஈரான் முன்னேறலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.