திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் குடிசை மாற்று வாரியம் மூலம்
1.81 கோடியில் கட்டப்பட்ட 166 கான்கிரீட் வீடுகள் பாழடைந்து காணப்படுகின்றன.
தாமிரபரணி ஆற்றங்கரையோரம் குடிசைகளில் வசிக்கும் மக்களுக்காக கட்டப்பட்ட இந்த வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் பயனாளிகள் எவரும் அங்கு குடியேறவில்லை.
மத்திய அரசின் 12-வது நிதிக் குழுவின் நோக்கமான, அரசு நிலத்தை ஆக்கிரமித்து குடிசை அமைத்து வசிப்பவர்களுக்கு மாற்று இடம் கொடுத்து அவர்களைக் குடியேற்றும் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரையோரம் குடிசைகளில் வசிக்கும் மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் 2005-ல் தொடங்கப்பட்டது.
தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள சிந்துபூந்துறை, கைலாசபுரம், மீனாட்சிபுரம், குறுக்குத்துறை, வேடுவர் காலனி, கணேசபுரம் ஆகிய பகுதிகளில் மிகவும் மோசமான சுற்றுப்புறச் சூழலில் 982 குடும்பங்கள் வசித்து வருவதாகக் கணக்கிடப்பட்டது.
இந்த புதிய மாற்று குடியிருப்புத் திட்டத்திற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்து விண்ணப்பங்களை அளித்தனர்.
எனவே, திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள சுத்தமல்லி காந்திநகரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 1.72 ஹெக்டேர் நிலத்தில் 1.81 கோடியில் 166 வீடுகள் கட்டும் பணி 2007-ல் தொடங்கப்பட்டு 2008 ஜூலையில் முடிக்கப்பட்டது.
இரட்டை வீடுகளாக அமைந்துள்ள அந்த குடியிருப்பில் ஒரு வீடு 1.10 லட்சம் செலவில் கட்டப்பட்டது. 190 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள அந்த வீட்டில் ஓர் அறை, சமையல் அறை, வீட்டுடன் இணைந்த கழிப்பறை இடம்பெற்றுள்ளது. தெருவிளக்கு, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. புதிய இடத்தில் குடியேற விருப்பம் தெரிவித்தவர்களில் 166 பேருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன.
இந்த வீடுகளில் குடியேறுவோர் மாதந்தோறும் 300-ம், முன்வைப்புத் தொகையாக 3 மாதத் தொகையையும் செலுத்த வேண்டும். மேலும், ஏற்கெனவே வசித்து வந்த குடிசை வீட்டையும் இடித்துவிட்டு புதிய வீட்டில் குடியேற வேண்டும் என்பது விதிமுறை. அவ்வாறு குடியேறுவோருக்கு 15 ஆண்டுகளில் புதிய வீடு சொந்தவீடாகி விடும்.
நெல்லை சந்திப்பிலிருந்து தொலைவு, தொழில் வாய்ப்பின்மை காரணங்களால், ஒதுக்கீடு பெற்ற எவரும் வீடுகளில் குடியேறவில்லை. மேலும் ஆற்றங்கரையில் உள்ள ஒரு பகுதியினரை மட்டும் அங்கு அனுப்புவது ஏன் என்றும் சிலர் கேட்கின்றனர்.
இந்நிலையில், சுத்தமல்லி குடியிருப்பில் உள்ள 166 வீடுகளும் பூட்டிக் கிடக்கின்றன. பராமரிப்பு இன்றி பாழடைந்து வருகின்றன.
இதனிடையே, இரண்டாவது கட்டமாக ரெட்டியார்பட்டியில் இப்போது 6.5 கோடியில் 306 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 6 ஆம் தேதி திறந்துவைத்தார். அதற்கான பயனாளிகள் பட்டியலும் தயார் செய்யப்பட்டு குடிசைமாற்று வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் ஒதுக்கீட்டு ஆணை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் கட்டமாக கட்டப்பட்ட சுத்தமல்லி குடியிருப்பில் இதுவரை எவரும் குடியேறாத நிலையில், இந்த 2-வது கட்ட குடியிருப்பில் குடியேற எத்தனை பேர் முன்வருவார்கள் எனத் தெரியவில்லை. சுத்தமல்லி குடியிருப்பு மாதிரி இந்த ரெட்டியார்பட்டி குடியிருப்பும் ஆகிவிடக்கூடாது என்ற கவலை குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் உள்ளது.
எனவே, அரசு இதில் உறுதியான நடவடிக்கை எடுத்து ஆற்றங்கரையோரம் வசிப்போரை அப்புறப்படுத்தி, புதிய குடியிருப்புகளில் குடியேற்றினால் மட்டுமே பொதுமக்கள் வரிப்பணம் சுமார் 8.31 கோடிக்கு பயன் கிடைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.