கோவை: வாழைத்தார் மண்டி புகையால் கோவை ஆர்.எஸ். புரம் மாநகராட்சி மேனிலைப்பள்ளி மாணவர்கள் மூச்சுத்திணறி படிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
கோவை மாநகராட்சியில் உள்ள 88 பள்ளிகளில் மிகவும் பழமையானது ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேனிலைப் பள்ளி. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1934-ல் கட்டப்பட்ட பெருமைக்குரியது இந்த பள்ளி. முன்னாள் எம்.பி. சி.டி.தண்டபாணி, இப்போதைய எம்.எல்.ஏ. கோவை தங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. இளங்கோ என கோவையில் பெயர் பெற்ற அரசியல்வாதிகளும் இப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தான்.
20 ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் இங்கு படித்து வந்தனர். மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் ஆண்கள் மேனிலைப்பள்ளியாக இருந்த இப்பள்ளி இப்போது இருபாலர் பள்ளியாக மாறிவிட்டது. இப்போது 600 மாணவ, மாணவிகள் மட்டுமே படித்து வருகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்கும் வகையில் இப் பள்ளி அருகே உள்ள வாழைத்தார் மண்டி செயல்பட்டு வருகிறது.
வாழைத்தார் மண்டி இப்போது அமைந்துள்ள இடம் முன்பு இப்பள்ளிக்குச் சொந்தமானது. மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் காலியான வகுப்பறைகள் வாழைத்தார் மண்டி செயல்பட 15 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம் குத்தகைக்கு விட்டது.
வாழைத்தார் மண்டி துவக்கப்பட்ட சில ஆண்டுகள் வரை சுற்றுச்சூழல் பிரச்னைகள் இல்லை. ஆனால், இப்போது சில ஆண்டுகளாக சுற்றுச்சூழல் பிரச்னை அதிகரித்து வருகிறது. இந்த மண்டிக்கு வரும் வாழைத்தாரின் கழிவுகள், இலைகள், தண்டுகள், சருகுகள் உள்ளிட்டவை அதே வளாகத்துக்குள் வைத்து எரிக்கப்படுகின்றன. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கழிவுகளை எரிப்பதால் அதில் இருந்து வெளியாகும் புகையால் மாநகராட்சிப் பள்ளியில் வகுப்பறைக்குள் இருக்கும் மாணவ, மாணவிகள் கண் எரிச்சல், இருமல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
வாழைத்தார் மண்டியின் நுழைவு வாயிலின் இருபுறமும் அங்கன்வாடிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு உள்ள குழந்தைகளும் இதேபோல கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றன.
"குப்பைகளை மண்டி வளாகத்துக்குள் போடக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் தான் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி அடிக்கடி குப்பைகளை எரித்துவிடுவதால் பள்ளி மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து மண்டல கூட்டம், மாமன்றக் கூட்டம் ஆகியவற்றில் பலமுறை குரல் எழுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப் பிரச்னை பற்றி கண்டன குரல் எழுப்ப ஆள் இல்லாத நிலை உருவாகிவிட்டது. எனவே, சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என்கிறார் இப் பள்ளியின் முன்னாள் மாணவரும், கோவை மாநகராட்சி 57-வது வார்டு கவுன்சிலருமான எம்.எஸ்.வேல்முருகன்.
"பள்ளிக்கூடம் இல்லாத இடம், பொதுமக்கள் அடர்த்தியாக வசிக்காத இடம் என பார்த்து வாழைத்தார் மண்டியை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும். அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே இடத்தில் சமுதாயக்கூடம், மாணவர் விடுதி அல்லது ஆசிரியர் குடியிருப்பை கட்டலாம்' என்கிறார் கோவை மாவட்ட வள்ளுவர் சமூக சங்கத்தின் தலைவர் சி.பி.வெள்ளிங்கிரி.
"சம்பந்தப்பட்ட இடத்தை ஏற்கெனவே ஆய்வு செய்தபோது வாழைத்தார் மண்டி செயல்பட இது சரியான இடம் இல்லை என்பது குறித்து ஆணையரிடம் தெரிவித்தோம். வாழைத்தார் மண்டி குத்தகை தொடர்பான தீர்மானம் இந்த ஆண்டு மாமன்றக் கூட்டத்தில் வந்தபோது கல்விக்குழு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இனிமேல் குப்பைகள் எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இப் பிரச்னை வர வாய்ப்பு இல்லை என்றும் மேயர், ஆணையர் உறுதி அளித்தனர். மீண்டும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்கிறார் மாநகராட்சி கல்விக்குழுத் தலைவர் ஆர்.கல்யாணசுந்தரம்.
மாணவர்கள் காற்றோட்டமான, சுகாதாரமான இடத்தில் கல்வி கற்கக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது மாநகராட்சியின் பொறுப்பு. ஆனால் பொறுப்பை தட்டிக்கழிக்கும் வகையில் மாநகராட்சி செயல்பட்டால், பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வியும் உடல் நலமும் கெடுவதுடன் எதிர்காலமும் கேள்விக்குறியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.