திருப்பூர்: கடுமையான நூல் விலையேற்றம் காரணமாக திருப்பூரில் 50 சதவீத நிறுவனங்களில் எவ்வித லாபமோ, நஷ்டமோ இல்லை என்ற நிலையில் தீபாவளி பனியன் உற்பத்தி நடைபெற்று வருகின்றன. மற்ற 50 சதவீத நிறுவனங்களில் வெகுவாக உற்பத்தி குறைக்கப்பட்டுவிட்டதால் இந்த ஆண்டு தீபாவளி திருப்பூர் தொழில்துறை மத்தியில் களையிழந்துள்ளது.
விலையுயர்வு: கடந்த ஓன்றரை ஆண்டுகளாக உள்நாட்டில் வரைமுறையின்றி உயர்ந்து வரும் பஞ்சு, நூல் விலை உயர்வால் நாட்டிலுள்ள அனைத்து ஜவுளித் தொழில்களும் பெரும்பாதிப்புக்குள்ளாகி உள்ளன. இதற்கிடையில், நவம்பர் 1-ம் தேதி முதல் ஏற்றுமதிக்கு பருத்தி அனுமதிக்கப்படும் என்ற மத்திய தொழில் வர்த்தக அமைச்சகம் அறிவிப்பாலும், பஞ்சு வர்த்தகர்களின் பதுக்கல் காரணமாகவும் உள்நாட்டில் பஞ்சு, நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு ரூ. 24 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு காண்டி (355.54 கிலோ) பஞ்சு, இப்போது ரூ. 41 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. அதன்விளைவாக, பின்னலாடை உற்பத்திக்குப் பயன்படும் 40நெ நூல் விலை கிலோ ரூ. 139ல் இருந்து ரூ. 204ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், 20நெ, 24நெ, 30நெ, 34நெ என அனைத்து ரக நூல்களும் 47 சதவீதம் அளவுக்கு உயர்ந்து விட்டன.
உற்பத்தி குறைப்பு: கடுமையான நூல் விலையேற்றம் காரணமாக திருப்பூர்
பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இப்போது தீபாவளி நெருங்கி வரும் நிலையில் பண்டிகைக்கால ஆர்டர்களை உற்பத்தி செய்வதிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, நூல் விலையேற்றம் காரணமாக சுமார் 25 சதவீத நிறுவனங்களில் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து உயர்ந்து கொண்டுள்ள நூல் விலையால் மேலும் 25 சதவீத நிறுவனங்களில் உற்பத்தி குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளில் தீபாவளி பண்டிகையையொட்டி தினமும் 3 ஷிப்டுகளாக (8 மணி நேரம் ஒரு ஷிப்ட்) நடக்கும் பின்னலாடை உற்பத்தி இந்த ஆண்டு ஒரு ஷிப்ட் அளவிலேயே நடைபெற்று வருகிறது. தவிர, 50 சதவீத நிறுவனங்களில் தேவையான ஆர்டர்கள் கிடைத்திருந்தபோதிலும் நூல் விலையேற்றத்தால் புதிய விலைக்கு உற்பத்தி செய்து கொடுக்க முடியாமல் லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை என்ற நிலையிலேயே உற்பத்தி நடைபெற்று வருகிறது என்கிறார் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஏ.சி.ஈஸ்வரன்.
களையிழப்பு: அவர் மேலும் கூறுகையில், நூல் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டு
திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ச்சியான வர்த்தகம் மற்றும் தொழிலாளர்களின் வேலையிழப்பை கருத்தில் கொண்டு உற்பத்தி குறைப்பு என்ற நிலையில் உற்பத்தி செய்கின்றன. இதே நிலை தீபாவளி பண்டிகைக்குப் பிறகு நீடிக்காது. பஞ்சு, நூல் விலையேற்றத்தை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிடில் திருப்பூரிலுள்ள அனைத்து நிறுவனங்களும் ஸ்தம்பிக்கும் என்றார்.
தீபாவளி நெருங்கி வரும் நிலையில் உள்நாட்டுச் சந்தைக்கான பின்னலாடைகளின் விலை 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஓன்றரை ஆண்டுகளில் 46 சதவீதம் விலையேற்றம் செய்யப்பட்டுள்ளதால் திருப்பூருக்கான வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுச் சந்தையை பொருத்தவரை ஆண்டு முழுவதும் நடக்கும் உற்பத்தியைக்காட்டிலும் தீபாவளி, கிறிஸ்துமஸ், தசரா, புத்தாண்டு ஆகிய பண்டிகைக்கால சீசன் மட்டுமே திருப்பூர் வர்த்தகத்தை தீர்மானிக்கும். இந் நிலையில், கடுமையான நூல் விலையேற்றத்தால் பெருமளவில் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. திருப்பூரின் பண்டிகைக்கால உற்சாகமும் களையிழந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.