உதகை: உதகையில் உள்ள ஒரே விளையாட்டு மைதானமான மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட திறந்தவெளி அரங்கில் அரசு விழாக்கள் நடத்துவதால், மைதானமும், ஓடுதளமும் வீணாவதுடன், வீரர்கள் பயிற்சி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
நீலகிரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் மைதானம் உள்ளது. இங்குதான் மாவட்டத்தின் அனைத்து முக்கிய விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படும். மேலும், விளையாட்டு மைதானங்கள் இல்லாத பள்ளிகளுக்கும், சிறிய அளவில் விளையாட்டு மைதானம் இருக்கும் பள்ளிகளுக்கும் இதுவே புகலிடமாய் விளங்குகிறது.
ஆனால், இந்த மைதானத்தில் விளையாட்டு நிகழ்ச்சிகளோடு, பல்வேறு விழாக்கள், நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதால், வருடத்தில் 6 மாதங்களுக்கு மைதானத்தை விளையாட்டு வீரர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, ஏப்ரல், மே மாதங்களில் கோடை விழாவுக்காக சுமார் ஒரு மாதம் மைதானம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் தேயிலை மற்றும் சுற்றுலா விழாவுக்காக இது கையகப்படுத்தப்படுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகள், விழா நடைபெறும் காலம் மற்றும் விழா முடிந்த பின்னர் மைதானத்தைச் சீரமைக்கத் தேவைப்படும் காலத்தைக் கணக்கில் கொண்டால்,
ஆண்டில் பாதி நாள்களுக்கு மைதானத்தைப் பயன்படுத்தவே முடியாது. இதேபோல், பருவமழைக் காலத்திலும் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு மைதானத்தைப் பயன்படுத்த முடியாது. எஞ்சியிருக்கும் 3 மாதங்கள் மட்டுமே விளையாட்டு வீரர்களுக்குப் பயனுள்ளதாய் அமைகிறது மைதானம்.
விளையாட்டு நிகழ்ச்சிகளைத் தவிர, வேறெதெற்கும் மைதானத்தைப் பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவிருந்தும், உதகையில் மட்டும் விதிகளை மீறி விளையாட்டு மைதானம் ஆக்கிரமிக்கப்படுகிறது. நடப்பாண்டில், 4 நாட்கள் நடத்தப்பட்ட தேயிலை மற்றும் சுற்றுலா விழாவுக்காக, மைதானத்தின் நடுப்பகுதியில் பிரமாண்ட மேடையும், அதைச்சுற்றிலும் காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டன.
இதற்காகத் தோண்டப்பட்ட குழிகளை மூடுவதற்கு குறைந்தது ஒரு மாதமாகும். இதனால் மாவட்ட அளவிலான கால்பந்து, கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
பாழாகும் 10 லட்சம் ஓடுதளம்: இங்கு தடகளப் பயிற்சிக்காக 10 லட்சத்தில் மணலும், நிலக்கரித் தூளும் கலந்து உருவாக்கப்பட்டுள்ள ஓடுதளத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவது, தடகள வீரர்களை மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளது. அதிலும், மாவட்டத்தின் முக்கியப் பிரமுகர்களே, ஓடுதளத்தில் தங்கள் வாகனங்களை இயக்குவது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. உதகை நகர்மன்றத் துணைத் தலைவரும், மாவட்ட கூடைப்பந்து சங்கத் தலைவருமான ஜே.ரவிக்குமார், இத்தகு செயல்களுக்கு ஒரு விழாவில் பகிரங்கமாய் கண்டனம் தெரிவித்தார்.
அண்மையில் முடிந்த காமன்வெல்த் போட்டிகளின்போது, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தடகள வீரர்கள், திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக இம் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது, இந்த மைதானத்தின் தரம் குறித்து சர்ச்சை எழுந்தததால், அவர்கள் இங்கு பயிற்சி மேற்கொள்ளாமல், வெலிங்டனில் உள்ள ராணுவ விளையாட்டு மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டனர்.
விளையாட்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, சர்வதேச அளவில் விளையாட்டு வீரர்களை உருவாக்கி வரும் சூழலில், உதகையில் உள்ள ஒரே மைதானத்தையும் அரசு விழாக்கள் என்ற பெயரில் பாழ்படுத்துவது வீரர்களிடம் மட்டுமன்றி, விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.