முகப்பு
தமிழ்நாடு

வீராணம் ஏரி நீர்மட்டம் 42.10 அடியை எட்டியது; விரைவில் சென்னைக்கு குடிநீர்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 42.10 அடியை எட்டியது.

Updated On : 12 ஆகஸ்ட் 2013, 4:50 am IST
பகிர்:

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 42.10 அடியை எட்டியது.

காவிரி டெல்டா கடைமடைப் பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததாலும், கர்நாடகம் தமிழகத்துக்கு தர வேண்டியை நீரை தராததாலும் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது.

மேலும் கடந்த மூன்று மாதகாலமாக ஏரி, குளங்கள், ஆறுகள், வடிகால் வாய்க்கால்கள் வறண்டு போயின. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு போனது. இதனால் ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் புதிய வீராணம் திட்டம் மூலம் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இந்நிலையில் இந்த ஆண்டு கர்நாடகத்திலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டு மேட்டூர் அணை நிரம்பியதால் காவிரியில் நீர் திறக்கப்பட்டு கீழணையிலிருந்து வடவாறு மூலமாக வீராணத்துக்கு 2500 கனஅடி நீர் அனுப்பட்டு வருகிறது. வறண்டு போய் இருந்த வீராணம் ஏரி நிரம்பி ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 42.10 அடியை எட்டியது.

ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.50 அடியாகும். இன்னும் இரண்டு தினங்களில் ஏரி நிரம்பியதும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு விநாடிக்கு 74 கனஅடி நீர் அனுப்பப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.