முகப்பு
தமிழ்நாடு

சமையல் எரிவாயுவுக்கு நேரடி மானியம்: அக்டோபர் 1 முதல் தமிழகத்தில் அறிமுகம்

சமையல் எரிவாயுவுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டம் அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ஆம் தேதி முதல் அரியலூர் மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Updated On : 12 செப்டம்பர், 2013 at 1:29 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:20 PM

சமையல் எரிவாயுவுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டம் அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ஆம் தேதி முதல் அரியலூர் மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இப்போது இந்த திட்டம் பல்வேறு மாநிலங்களின் 54 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 2.19 கோடி பேருக்கு ரூ. 272 கோடி மதிப்பில் சமையல் எரிவாயு மானியம் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் முதல் கட்டமாக 20 மாவட்டங்களிலும் 2-ஆம் கட்டமாக 34 மாவட்டங்களிலும் ஆதார் எண் மூலமாக செயல்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் 3-ஆம் கட்டமாக 44 மாவட்டங்களில் இந்த திட்டத்தை அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தின் அரியலூர் மாவட்டமும் அடங்கியுள்ளது.

Advertisement

நவம்பர் 1-ஆம் தேதி முதல் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், டிசம்பர் மாதம் முதல் கடலூர், பெரம்பலூர், கரூர், தருமபுரி, சேலம், விருதுநகர், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்.

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தஞ்சாவூர், திண்டுக்கல், திருவாரூர், நாமக்கல், வேலூர், ராமநாதபுரம், விழுப்புரம், தேனி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.

எரிவாயு வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே மானியத்தை பெற ஆதார் எண்ணை பெற்று, எரிவாயு இணைப்பு எண்ணில் சேர்க்க வேண்டும். மானியமில்லாத விலையில் எரிவாயு சிலிண்டர் வாங்க ஆதார் எண் தேவையில்லை.

மேலும் வாடிக்கையாளர்கள் ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண் மற்றும் எரிவாயு இணைப்பு எண் ஆகியவற்றுடன் இணைக்க 3 மாதம் அவகாசம் அளிக்கப்படும். இந்த மூன்று மாதத்துக்கு மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்படும். 3 மாதங்களுக்கு பிறகு சந்தை விலையில்தான் சிலிண்டர் வாங்க வேண்டும். அதன் பின்னர் ஆதார் எண்ணை வங்கி கணக்கு மற்றும் எரிவாயு இணைப்பு எண்ணுடன் இணைக்கும் வாடிக்கையாளர்களுக்கே வங்கியில் மானியத் தொகை செலுத்தப்படும்.

மேலும் இந்த திட்டம் குறித்த விவரங்களை www.petroleum.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த வாரம் வரையிலான நிலவரப்படி அரியலூரில் சுமார் 80 சதவீதம் பேரிடம் பயோ மெட்ரிக் பதிவுகள் பெறப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே குறைந்த அளவாக சென்னையில் சுமார் 34 சதவீதம் பேரிடம் மட்டுமே ஆதார் எண்ணுக்கான பயோ மெட்ரிக் பதிவுகள் பெறப்பட்டுள்ளன.

அக்டோபர் மாதத்துடன் பயோ மெட்ரிக் தகவல்கள் பதிவு செய்யும் முகாம்கள் நடத்தப்படாது. ஆனால் தமிழகம் முழுவதும் நிரந்தர முகாம்கள் திறக்கப்படும். குறிப்பிட்ட காலத்துக்குள் பயோ மெட்ரிக் தகவல்களை பதிவு செய்யாதவர்கள், இந்த நிரந்தர முகாம்களில் பதிந்துகொள்ளலாம் என்று மக்கள்தொகை கணக்கெடுப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.