தூத்துக்குடி-கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையைத் தொடங்க, தூத்துக்குடி வஉசி துறைமுகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் முறைப்படி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் பல்வேறு துறைமுகங்களில் இருந்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வரும் சரக்குக் கப்பல்கள் மூலம் பல்வேறு பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.
இதேபோல, தூத்துக்குடி மட்டுமன்றி தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு இடங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள், தூத்துக்குடி துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
சரக்குப் போக்குவரத்தில் ஆண்டுதோறும் வளர்ச்சி கண்டுவந்தபோதிலும், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து பயணிகள் கப்பல் இயக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, கடந்த 2011ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி முதல் மும்பையைச் சேர்ந்த பிளமிங்கோ லைனர்ஸ் என்ற நிறுவனம் ஸ்காட்டியா பிரின்ஸ் என்ற பயணிகள் கப்பலை தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு வாரம் இருமுறை இயக்கியது.
ஆயிரத்து இருநூறு பேர் பயணம் செய்யக்கூடிய இந்தக் கப்பல் சேவை தொடங்கியதில் இருந்து, சராசரியாக நூறு முதல் நூற்றி ஐம்பது பேர் மட்டுமே பயணம் செய்துவந்தனர்.
பெரும் எதிர்பார்ப்போடு தொடங்கப்பட்ட இந்தக் கப்பல் போக்குவரத்து சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை. 6 மாதம் வரை நீடித்த இந்தப் பயணிகள் கப்பல் போக்குவரத்து எந்தவித முன்னறிவிப்பின்றி அதே ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி திடீரென நிறுத்தப்பட்டது. எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் இல்லாததால் கப்பல் போக்குவரத்து சேவையை தனியார் நிறுவனம் நிறுத்திக் கொண்டதாகக் காரணம் கூறப்பட்டது.
இருப்பினும், தூத்துக்குடி- கொழும்பு இடையே ஏறத்தாழ 500 பேர் செல்லக்கூடிய வகையிலான சிறிய கப்பலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கப்பல் துறை அமைச்சகம் அப்போது அறிவித்திருந்தது.
ஒப்பந்தக் குறியீடு வெளியீடு: இந்நிலையில், தூத்துக்குடி- கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் இயக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துறைமுக நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக தூத்துக்குடி வஉசி துறைமுகம் தனது இணையதளத்தில் தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பலை இயக்குவதற்கான ஒப்பந்தக் குறியீட்டை ஞாயிற்றுக்கிழமை வெளிட்டுள்ளது.
சிறிய அளவிலான கப்பலை இயக்குவதன் மூலம் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க முடியும் எனத் துறைமுக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏறத்தாழ 14 மணி நேரத்தில் கொழும்பைச் சென்றடையும் வகையில் பயணிகள் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது.
இதுதொடர்பான முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.