நாகை மாவட்டம், சீர்காழி அருகே திங்கள்கிழமை காலை திருக்கடையூர் கோயிலில் நடைபெறவிருந்த திருமணத்துக்காக மணமக்கள் மற்றும் உறவினர்கள் சென்ற வேன் விபத்துக்குள்ளானதில், நடந்து சென்ற பெண் இறந்தார். வேனிலிருந்த 14 பேர் காயமடைந்தனர்.
கொள்ளிடம் அருகேயுள்ள மாங்கனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி மகன் நடராஜ் (27). இவருக்கும், சீர்காழி காரைமேடு ஊராட்சி மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகள் விஜயசாந்திக்கும் (20) திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயிலில் திங்கள்கிழமை காலை திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக மாங்கனாம்பட்டில் உள்ள மணமகன் நடராஜ் வீட்டுக்கு பெண் விஜயசாந்தி மற்றும் உறவினர்கள் அழைத்துவரப்பட்டனர். பின்னர், அங்கிருந்து திருக்கடையூர் கோயிலுக்கு மணமக்கள், அவர்களது பெற்றோர், உறவினர்கள் ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர்.
சீர்காழி அருகே சூரக்காடு பகுதியில் வேன் சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் வேளாங்கண்ணி பேராலய விழாவுக்கு பாதயாத்திரையாகச் சென்ற வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்த ச. இளஞ்சியம் (45) மீது மோதிவிட்டு, அங்கிருந்த மரத்திலும் மோதியது. இதில், இளஞ்சியம் நிகழ்விடத்திலேயே இறந்தார்.
வேனில் பயணம் செய்த மணமகன் நடராஜ், மணமகள் விஜயசாந்தி, காரைமேடு சே. சங்கர்கணேஷ்(28), ஆச்சாள்புரம் சிவா(30), சென்னை கலைச்செல்வி(36), காரைமேடு கவிதா(40), மாங்கனாம்பட்டு ர. சுமதி(40), அமிர்தம்(40), ச. பானுமதி(23), உளுந்தூர்பேட்டை குமார்(25), ராம்குமார், சபரி(10), சுஷ்மிதா(2), வேன் ஓட்டுநர் கீழமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரா. ராஜீவ்காந்தி(30) உள்ளிட்ட 14 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்த சீர்காழி போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு, சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனிடையே, திட்டமிட்டபடி மணமக்களுக்கு சீர்காழி புற்றடிமாரியம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது.
இதுகுறித்து சீர்காழி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.