தமிழ்நாடு

தமிழகப் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கிறார் பிரதமர்

DIN

தமிழகத்தின் பிரச்னைகளை அறிந்து அவற்றை பிரதமர் மோடி தீர்த்து வைத்துக் கொண்டிருப்பதாக பாஜக தேசிய இளைஞரணித் தலைவர் பூனம் மகாஜன் கூறினார்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தவும், மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும், உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த வலியுறுத்தியும் பா.ஜ.க. இளைஞர் அணி சார்பில் கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படும் என அறிவித்தனர். ஆனால் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ.க. மாநில இளைஞரணித் தலைவர் வினோஜ் பி.செல்வம், தேசிய துணைத் தலைவர் ஏ.பி. முருகானந்தம், தேசியச் செயலாளர் ராஜா, தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், தேசிய கயிறு வாரியத் தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அந்தக் கூட்டத்துக்குத் தலைமை ஏற்று பா.ஜ.க. இளைஞரணி தேசியத்தலைவர் பூனம் மகாஜன் பேசியது:
தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி மலரும் காலம் வெகு தொலைவில் இல்லை. திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி குருவாக உள்ளார். ஏற்கெனவே காங்கிரஸ் பள்ளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. அவருடன் இணைந்து தி.மு.க.வும் பள்ளத்திற்குச் செல்கிறது.
காங்கிரசுடன் இணைந்து சூரியன் மறைந்து வருகிறது. பா.ஜ.க. ஆட்சி மலர்ந்தால்தான், தமிழக மக்களின் கனவுகள் நிறைவேறும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழக அரசுடன் இணைந்து செயல்படுகிறது. மீனவர்கள் பிரச்னை உள்பட தமிழக மக்களின் அனைத்துப் பிரச்னைகளையும் உன்னிப்பாகக் கவனித்து, அதனை மோடி தீர்த்து வருகிறார்.
இதற்கு முன்பு மத்தியில் ஆட்சியில் இருந்தவர்கள் தமிழர்களின் பிரச்னைகள் பற்றி பேசியதே இல்லை. ஆனால் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பின்னர் இந்நிலை மாறி, தமிழர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்துகிறது.
இளைஞர்கள் அனைவரும் நரேந்திர மோடியின் செயலியைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பயன்படுத்த வேண்டும்.
மோடியின் கனவான புதிய பாரதத்தை அனைவரும் இணைந்து படைக்கவேண்டும். அதற்கான ஊக்கம் இளைஞர்களிடம் இருக்கவேண்டும்.
கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பா.ஜ.க. விரைவில் புதிய தமிழகத்தைப் படைக்கும். தமிழகத்தில் உள்ளாட்சி, மக்களவை, சட்டப் பேரவை தேர்தல் என நடத்த வேண்டி யுள்ளது. தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அதனைச் சந்திப்பதற்கு பாஜக தயாராக உள்ளது.
ராகுல் காந்தி செல்லும் இடம் தோல்வியை தழுவி வருகிறது. ஆனால் எங்களுடைய தேசிய தலைவர் அமித்ஷா செல்லும் இடம் வெற்றி பெற்று வருகிறது. இதுதான் ராகுல் காந்திக்கும், அமித்ஷாவுக்கும் இடையே உள்ள வித்தியாசம்.
ஆகஸ்ட் 20-இல் அமித்ஷா தமிழகம் வருகை: வரும் 20,21,22 ஆகிய தேதிகளில் அமித்ஷா தமிழகத்துக்கு வர உள்ளார். இதனால் தமிழகத்திலும் பா.ஜ.க. ஆட்சி அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வாக்குகள் கிடைத்துள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையை பா.ஜ.க. உருவாக்கும். தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ச்சி அடைந்த ஆலமரமாக வளர்ந்து வருகிறது. எனவே யாரும் எங்களை கிள்ளுக்கீரையாக இனி எண்ண வேண்டாம் என்றார்.
தலைமைச் செயலகம் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை மனுவை அளித்தபின் செய்தியாளர்களிடம் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கூறியதாவது: பா.ஜ.க.இளைஞரணி சார்பில் பேரணி நடத்தி அதன் கோரிக்கைகளை முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளோம். பேரணியின் முதன்மை கோரிக்கை பூரண மதுவிலக்கு வேண்டும் என்பது தான். ஆகவே உடனே முடியவில்லை என்றாலும் படிப்படியாகவாவது கடைகளை மூட ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை.
குடிப் பழக்கத்தில் இருந்து விடுபட நினைப்பவர்களுக்கு மருத்துவமனைகளில் மறு வாழ்வு மையங்களை அமைக்க வேண்டும். மருத்துவக் கல்லூரியில் தனிப்பட்ட பயிற்சி கொடுத்து வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT