தமிழ்நாடு

தமிழகத்தில் எந்த திட்டப் பணிகளிலும் ஓஎன்ஜிசி ஈடுபடவில்லை

DIN

ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழகத்தில் மீத்தேன், ஷேல்கேஸ் போன்ற எந்த திட்டப்பணிகளிலும் இதுவரை ஈடுபடவில்லை என்றார் ஓஎன்ஜிசி நிறுவன காரைக்கால் பகுதி செயல் இயக்குநர் குல்பீர்சிங்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
இந்திய அரசின் பொது நிறுவனமான ஓஎன்ஜிசி தமிழக காவிரிப் படுகையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்நிறுவனத்தின் சார்பில் கதிராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கச்சா எண்ணெய் பூமிக்கடியிலிருந்து உறிஞ்சப்படுகிறது. இதில், "குத்தாலம் 35' என்ற எண்ணெய்க் கிணறு அருகே கசிவு ஏற்பட்டு அன்று மாலையே சரிசெய்யப்பட்டது. இதுதொடர்பாக காவல் துறையில் தொடரப்பட்ட வழக்கைத் திரும்பப் பெறும் எண்ணமில்லை.
மேலும், தமிழகத்தில் ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்யப்பட்ட 110 இடங்களில்தான் எண்ணெய்க் கிணறு அமைக்கப்படவுள்ளது. புதிய இடங்களில் அமைக்கவில்லை.
நாகை, கடலூர் மாவட்டங்களில் பெட்ரோலிய கெமிக்கல் மண்டலம் அமைக்கப்படவுள்ளதற்கும் ஓஎன்ஜிசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழகத்தில் மீத்தேன், ஷேல்கேஸ் போன்ற எந்தத் திட்டப் பணிகளிலும் இதுவரை ஈடுபடவில்லை. தமிழகத்தில் இந்த நிறுவனத்தின் மீது பொதுமக்களுக்கு வெறுப்பு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கதிராமங்கலத்தில் அமைதி நிலவ அங்குள்ள மக்களிடம் விரைவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கதிராமங்கலத்தில் சமூக சேவைத் திட்டத்தின் குடிநீர் வழங்கப்படுகிறது.
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் நிலத்தடி நீரும், அதன் தரமும் பாதிக்கப்படவில்லை என்பதை எங்களுடைய ஆய்வு மீண்டும் உறுதி செய்துள்ளது. கதிராமங்கலத்தில் குழாய் உடைப்பு ஏற்பட்டது குறித்து ஆய்வறிக்கை தயாரிக்கப்படுகிறது. எங்கள் நிறுவனம் தொடர்பாக பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். பொதுமக்களுக்கு ஓஎன்ஜிசி நிறுவனத்தால் எந்தப் பாதிப்பும் இல்லை என்பதை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு பிரசாரம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இந்தப் பிரசாரம் செய்யப்பட உள்ளது என்றார். முதன்மைப் பொது மேலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


குறுந்தகடு வெளியீடு
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சனிக்கிழமையன்று தனியார் ஹோட்டலில் ஓஎன்ஜிசி விழிப்புணர்வு பிரச்சார குறுந்தகட்டினை செயல்இயக்குநர் குல்பீர்சிங் வெளியிட, முதன்மை பொது மேலாளர் ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார்.
பின்னர் முதன்மை பொது மேலாளர் ராஜேந்திரன் கூறியது: அண்மை காலமாக ஓஎன்ஜிசிக்கு எதிராக பொதுமக்களிடம் கருத்துகள் திணிக்கப்பட்டு வருகிறது. ஓஎன்ஜிசியின் செயல்பாடுகள் மற்றும் சமுதாய பங்களிப்பை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லவும், ஓஎன்ஜிசியைப்பற்றி தெளிவான புரிதலை ஏற்படுத்தவும் ஓஎன்ஜிசி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்காக இன்று முதல் வானொலி மூலமாக விழிப்புணர்வு பிரசாரத்தை ஒலிப்பரப்பவுள்ளது.இந்த குறுந்தகடில் ஓஎன்ஜிசி நிறுவனம், வீட்டில் சமைக்க தேவைப்படும் எரிவாயுவில் தொடங்கி மனித வாழ்வுக்கு தேவைப்படும் அனைத்து விதமான போக்குவரத்து வாகனங்கள், மின்சாரம் மற்றும் தொழில் நிறுவனங்கள் என அனைத்துக்கும் சக்தியூட்டி தேசத்தை வளமாக்கி மக்களின் வசதியான வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கிறது.இது மக்களின் மகிழ்ச்சிக்காக உழைப்பது போல் இயற்கை மற்றும் சுற்றுசூழல் மீதும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. அதன் காரணமாகவே சர்வதேச தர நிர்ணய கழகத்தின் சான்றிதழின் அடிப்படையில், இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனத்துறை, சுரங்கத்துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளின் படி இயற்கைக்கு பாதுகாப்பாக இயங்குகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT