தமிழ்நாடு

ஆஷ்ரம் பள்ளிக்கு பூட்டு: ரூ.5 கோடி இழப்பீடு கோரி ஐஸ்வர்யா தனுஷ் வழக்கு

DIN

சென்னை கிண்டியில் உள்ள ஆஷ்ரம் பள்ளியின் நற்பெயரை களங்கப்படுத்தியதற்காக ரூ.5 கோடி இழப்பீட்டை நில உரிமையாளர் வழங்க உத்தரவிடக் கோரி திரைப்பட இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்தின் செயலாளரும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் தாக்கல் செய்த மனு விவரம்: ஸ்ரீராகவேந்திரா கல்வி சங்கம் 1991-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இந்தச் சங்கத்தின் கீழ் ஆஷ்ரம் என்ற பெயரில் வேளச்சேரி, சைதாப்பேட்டை, கிண்டி ஆகிய இடங்களில் பள்ளிகள் உள்ளன.
கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பள்ளி, கடந்த 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பள்ளி சுமார் 33,086 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. கிண்டியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரலு என்பவருக்குச் சொந்தமான இடத்தை குத்தகை அடிப்படையில், அவரிடமிருந்து ராகவேந்திரா கல்விச் சங்கம் பெற்றது.
சதுர அடிக்கு ரூ. 15.65 வீதம், ரூ 2.40 லட்சம் வாடகையாக தர ஒப்பந்தம் போடப்பட்டது. கடந்த மே மாதம் வரை வெங்கடேஸ்வரலுவுக்கு தரவேண்டிய வாடகை எவ்வித பாக்கியும் இல்லாமல் தரப்பட்டது.
இந்த நிலையில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி, மாலை 4.30 மணிக்கு வெங்கடேஸ்வரலு மற்றும் அவரது ஆள்கள் இந்த பள்ளியின் நுழைவுவாயிலை மூடி பள்ளி மற்றும் காலியிடத்தை அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
மறுநாள் பள்ளியை திறக்க சென்றபோது, பள்ளியின் வாயில்கள் மூடப்பட்டிருந்தன. அது மட்டுமல்லாமல் வெங்கடேஸ்வரலுவும், வாரிசுகளும் பல்வேறு தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிகைகளுக்கும் அவர்கள் அளித்த பேட்டியில், பள்ளி வாடகையைச் செலுத்தவில்லை என்றும் அதனால் பள்ளி கட்டடத்தை அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறியுள்ளனர்.
கடந்த 2005-ஆம் அந்த இடத்தில் பள்ளியை ஆரம்பித்தபோது, சுமார் ரூ.5 கோடிக்கு மேல் செலவு செய்து தொழிற்சாலை இடமாக இருந்ததைப் பள்ளி வளாகமாக மாற்றினோம். பள்ளி நிர்வாகம் சார்பில் இட உரிமையாளருக்கும் எந்த நிலுவையும் வைக்காத நிலையில் பள்ளி வளாகத்தை பூட்டியது மாணவர்கள், பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எங்கள் பள்ளி வளாகத்தில் அத்துமீறி நுழைந்ததற்காக நஷ்ட ஈடுத் தொகையாக ரூ.1 கோடியும், கல்வி சங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக ரூ .5 கோடியும் தர வெங்கடேஸ்வரலுவுக்கும், அவர்களது வாரிசுகளுக்கும் உத்தரவிட வேண்டும்.
மேலும், வெங்கடேஸ்வரலு மற்றும் அவரது ஆட்கள் ஆஸ்ரம் பள்ளிக்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் ஐஸ்வர்யா தனுஷ்கோரியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் திங்கள்கிழமை வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார். அப்போது, பள்ளி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் டி.டி ரவிச்சந்திரன், இந்த வழக்கை தொடர அனுமதிப்பதோடு, செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளுமாறும் முறையீடு செய்தார்.
இதை ஏற்ற நீதிபதி, செவ்வாய்க்கிழமை மனுவை விசாரிப்பதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT