தமிழ்நாடு

தேக்கம்பட்டியில் யானைகள் நலவாழ்வு முகாம் தொடக்கம்: 32 யானைகள் பங்கேற்பு

DIN

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியில் 9-ஆவது யானைகள் நலவாழ்வு முகாம் துவங்கியது.
இந்த முகாமில் பங்கேற்பதற்காக, கடந்த புதன்கிழமை முதலே பல்வேறு மாவட்டங்களிலிருந்து லாரிகள் மூலம் யானைகள் அழைத்து வரப்பட்டன. புதுவை திருநள்ளாறு கோயில் யானை உள்பட மொத்தம் 32 யானைகள் வியாழக்கிழமை வந்து சேர்ந்தன.
தொடக்க விழாவையொட்டி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு முகாம் வளாகத்தில் யானைகள் வரிசையாக நிறுத்தப்பட்டன. பின்னர் அங்குள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வீரசண்முகமணி, மங்கல இசை முழங்க காலை 8.15 மணிக்கு அணிவகுத்து நின்ற யானைகளுக்கு கரும்பு, வெல்லம், பழங்கள் வழங்கி முகாமைத் தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை தலைமையிட இணை ஆணையர் சுதர்சன், இணை ஆணையர்கள் லட்சுமணன் (திருநெல்வேலி), செந்தில்வேலவன் (சிவகங்கை), ஆனந்த் (கோவை), முகாம் பொறுப்பாளர் வெற்றிச்செல்வன், உதவி ஆணையர்கள் ராமு (வனபத்ரகாளியம்மன் கோயில்), ஹர்ஷனி (திருப்பூர்), முருகையா (ஈரோடு), மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியன், வனச்சரகர் நசீர், கால்நடைத் துறை உதவி இயக்குநர் திருக்குமரன், கோயில் செயல் அலுவலர்கள் விமலா, கைலாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் உள்ள யானைகள் தினமும் குளிக்க வைக்கப்பட்டு, நடைப்பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், யானைகளின் உடல் எடைக்கேற்ப பசுந்தீவனம், சத்து மாத்திரை கலந்த உணவு வழங்கப்படுகிறது. உடல் நலம் குன்றிய யானைகளுக்கு மருத்துவக் குழுவினரின் பரிந்துரைக்கேற்ப, மருந்துகள் கலந்த உணவும், சிகிச்சையும் வழங்கப்படுகிறது.
அடர்ந்த வனப் பகுதியாக இருப்பதால், காட்டு யானைகள் முகாம் பகுதியில் நுழைவதைத் தடுக்க, வனத்துறை சார்பில் முகாமை சுற்றிலும் சோலார் மின் வேலியுடன், மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வன விலங்குகளின் ஊடுருவலைத் தடுக்க, 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 30-க்கும் மேற்பட்ட வனத்துறை காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை நடைபெற்ற முகாம்கள் 48 நாள்கள் நடைபெற்ற நிலையில், தற்போது நடைபெறும் முகாம் 30 நாள்கள் மட்டுமே நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெளத் ஆர்கன் வாசிக்கும் ரெட்டை திருப்பதி யானை லட்சுமி!


மேட்டுப்பாளையம் யானைகள் நலவாழ்வு முகாமில் பங்கேற்ற தூத்துக்குடி மாவட்டம், ரெட்டை திருப்பதியைச் சேர்ந்த லட்சுமி (16) என்ற யானை, மெளத் ஆர்கனை வாசித்து பார்வையாளர்களைக் கவர்ந்தது.
இதுகுறித்து அந்த யானையின் பாகன் பாலன் கூறியதாவது:
லட்சுமிக்கு புதிதாக ஏதாவது திறமையை கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மெளத் ஆர்கன் வாசிக்க கற்றுக் கொடுத்தேன்.
ஒராண்டு காலப் பயிற்சிக்குப் பின்னர் லட்சுமி, மெளத் ஆர்கனை இலகுவாக வாசிக்க கற்றுக் கொண்டது. யானைகள் முகாம் நடைபெறும்போதெல்லாம் நடனமாடியபடி, மெளத் ஆர்கனை ஆர்வமாக வாசித்து காண்பிப்பது லட்சுமிக்கு வழக்கமாகி விட்டது என்றார்.
மேலும், முகாமில் இணை பிரியாத தோழியான குற்றாலம் இளஞ்சி குமாரர் கோயில் யானை வள்ளியை சந்தித்தது லட்சுமிக்கு மிகவும் சந்தோஷமாகி விட்டது.
தனக்கு அருகே கட்டப்பட்ட வள்ளியை தும்பிக்கையால் வருடிக் கொடுப்பதும், அதற்கு வள்ளியும், லட்சுமியின் தலையைப் பாசத்துடன் தடவிக் கொடுப்பதும், காண்பவரைப் பரவசப்படுத்துகிறது.

முகாமில் முதன்முதலாக பங்கேற்ற குட்டி யானை மசினி


மேட்டுப்பாளையம் யானைகள் நலவாழ்வு முகாமில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலைச் சேர்ந்த மசினி என்ற 9 வயது குட்டி யானை முதன்முதலாக பங்கேற்றுள்ளது.
இதுகுறித்து அதன் பாகன் கஜேந்திரன் கூறுகையில், "தாயை விட்டுப் பிரிந்த இந்தக் குட்டி யானை முதுமலை யானைகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்தது.
கடந்த ஆண்டு 8 வயதை அடைந்தபோது, சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு இந்த யானை வழங்கப்பட்டது. தற்போது முதன்முதலாக இந்த புத்துணர்வு முகாமில் பங்கேற்றுள்ளது' என்றார்.

முகாமில் யானைகளுக்கு வழங்கப்படும் உணவு,பசுந்தீவன வகைகள்
தீவன வகைகள்: கூந்தல்பனை, தென்னை மட்டை, புற்கள், கரும்பு சோகை, பலா இலை, சோளத் தட்டு, ரீட்ஸ், ஆல்-அத்தி-அரசு மர இலைகள், மூங்கில் மற்றும் கீரைகள்.
தானியங்கள்: அரிசி, பச்சைப் பயறு, கொள்ளு, உப்பு, மஞ்சள்.
ஆயுர்வேத மருந்துகள்: அஷ்ட சூரணம், ஊட்டசத்து லேகியம், பயோ பூஸ்ட் மாத்திரைகள், புரதச்சத்து மற்றும் வைட்டமின் மாத்திரைகள், மினரல் மிக்சர்.
மற்ற உணவு வகைகள்: பேரீச்சை, அவல், கேரட், பீட்ரூட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT