தமிழ்நாடு

சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை பார்வையிட்ட நீதிபதிகள்: 2 வாரங்களில் அகற்றப்படும் என ஆட்சியர் உறுதி

DIN

மதுரையில், சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் திங்கள்கிழமை பார்வையிட்டனர்.
அப்போது, இந்தப் பணிகள் 2 வாரங்களுக்குள் நிறைவடையும் என்று நீதிபதிகளிடம் மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.
மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழகம் முழுவதும் வரும் 27ஆம் தேதிக்குள் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நிர்வாக நீதிபதி ஏ.செல்வம் மற்றும் என்.கிருபாகரன் ஆகியோர் நரசிங்கம் கண்மாய், கடச்சனேந்தல், அப்பன் திருப்பதி, கிடாரிப்பட்டி, ஏ.வெள்ளாளப்பட்டி, அழகர்கோவில், காதக்கிணறு உள்ளிட்ட இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை பார்வையிட்டனர்.
கள்ளந்திரி கால்வாய் பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டபோது, அங்குள்ள பொதுமக்களிடம் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பொதுமக்கள், கள்ளந்திரி கால்வாய் பகுதியில் சில இடங்களில் மட்டுமே சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டதாகத் தெரிவித்தனர். பல இடங்களில் நீர்நிலைகளில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்படாததை நீதிபதிகள் கண்டித்தனர். மேலும், மாவட்ட நிர்வாகத்தினர் மேற்கொண்டு வரும் பணிகளில் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். அப்போது நீதிபதிகள் கூறியது:
நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாத பட்சத்தில், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாநிலம் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை பார்வையிடுவதற்காக, நீதிபதிகள் அவ்வப்போது ஆய்வு நடத்த உள்ளனர்.
சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை மாவட்ட நிர்வாகத்தினர் கண்துடைப்பு நடவடிக்கையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதிகாரிகள் செய்யும் இந்தப் பணிகள் நாட்டுக்கான மகத்தான சேவை. அதை அலுவலக பணியாக எடுத்துக் கொள்ளாமல், சமூக சேவையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் சமீபத்தில் பள்ளி மாணவிகள் ஒன்றிணைந்து அப்பகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றியுள்ளனர். இது பாராட்டுதலுக்குரியது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT