தமிழ்நாடு

மகளிருக்கு மானியத்தில் இரு சக்கர வாகனத் திட்டம்: பணிகளைத் தொடங்கினார் முதல்வர் பழனிசாமி

DIN

உழைக்கும் மகளிருக்கு 50 சதவீத மானியத்துடன் இரு சக்கர வாகனங்கள் வாங்கும் திட்டத்துக்கான கோப்பில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை (பிப். 20) கையெழுத்திட்டார்.
ரூ.200 கோடி செலவிலான இந்தத் திட்டம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவாக "அம்மா இரு சக்கர வாகனத் திட்டம்' என்ற பெயரில் அழைக்கப்படும் என அவர் அறிவித்தார்.
5 கோப்புகளில்...: மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது உள்ளிட்ட ஐந்து முக்கியத் திட்டங்களுக்கான கோப்புகளில் அவர் கையெழுத்திட்டு தனது பணிகளைத் தொடங்கினார்.
முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தில் தனது பணிகளை திங்கள்கிழமை தொடங்கினார், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. அவர் உத்தரவு பிறப்பித்து, கையெழுத்திட்ட ஐந்து கோப்புகளின் விவரம்:
பணியிடங்களுக்கும், பிற வேலைகளுக்கும் மகளிர் எளிதில் செல்லும் வகையில் இரு சக்கர வாகனங்கள் வாங்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வாங்க 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவாக இந்தத் திட்டம் அம்மா இருசக்கர வாகனத் திட்டம் என அழைக்கப்படும். ஆண்டுக்கு சுமார் ரூ.200 கோடி செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
மீனவர்களுக்கு வீடுகள்: மீனவர்களுக்கென தனியாக வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் மீனவர்களுக்கான தனி வீட்டு வசதி திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிட்டு அதற்கான கோப்பில் முதல்வர் கையெழுத்திட்டார்.
இந்தத் திட்டத்தின் கீழ், 5,000 வீடுகள் கட்டப்படும். ஒரு வீட்டின் மதிப்பு ரூ.1.70 லட்சமாகும். ரூ.85 கோடியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
மாதாந்திர உதவித் தொகை:
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இப்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித் தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத இளைஞர்களுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித் தொகை ரூ.200-ஆகவும், தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.300-ஆகவும், பிளஸ் 2 தேர்ச்சி பெறாதோருக்கு ரூ.400-ஆகவும், பட்டப்படிப்பு, முதுநிலை படித்த இளைஞர்களுக்கு ரூ.600-ஆகவும் உயர்த்தி அதற்கான கோப்பில் முதல்வர் கையெழுத்திட்டார்.
இந்தத் திட்டத்தின் மூலம் இப்போது உதவித் தொகை பெற்று வரும் 55 ஆயிரத்து 228 இளைஞர்கள் உயர்த்தப்பட்ட உதவித் தொகை பெற்று பயன் அடைவர். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.31 கோடி செலவு ஏற்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மகப்பேறு நிதியுதவித் திட்டம்


ஏழைப் பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் உயர்த்தி வழங்கப்பட்டது. இந்தத் தொகையானது, ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இதற்கான கோப்பில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கையெழுத்திட்டார். இந்தத் திட்டத்தின் மூலம், ஆண்டுக்கு சுமார் 6 லட்சம் பெண்கள் பயனடைவர். ஆண்டுக்கு ரூ.360 கோடி கூடுதல் செலவில் இந்தத் திட்டத்தை அரசு செயல்படுத்தும்.

மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்


மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை அடையப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 500 டாஸ்மாக் கடைகளை மூடியும், கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைத்தும் கடந்த ஆண்டு மே மாதத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இந்த நிலையில், படிப்படியாக மதுவிலக்கு என்ற கொள்கையை முன்னெடுக்கும் வகையில் தமிழகத்தில் மேலும் 500 மதுபானக் கடைகள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டு, அதைச் செயல்படுத்தும் வகையில் அந்தக் கோப்பில் முதல்வர் பழனிசாமி கையெழுத்திட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT