தமிழ்நாடு

"இயற்கை எரிவாயு திட்டத்துக்கும் தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்'

DIN

மீத்தேன் திட்டத்துக்குத் தடை விதித்ததுபோல், இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கும் தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஆர்.முத்தரசன்.
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஆர்.முத்தரசன் புதன்கிழமை பார்வையிட்ட பின்னர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் காவிரி பாசனப் பகுதிகளில் விளைநிலங்களை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முயற்சித்தது. விவசாயிகளின் தொடர் எதிர்ப்பு, அரசியல் கட்சியினரின் போராட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து தமிழக அரசு மீத்தேன் திட்டத்துக்குத் தடை விதித்தது. இதனால், மத்திய அரசும் அத்திட்டத்தைக் கைவிட்டது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை ஹைட்ரோ கார்பன் என்று பெயர் மாற்றி, திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த 15ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, அப்பகுதி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசு மீத்தேன் திட்டத்தைக் கைவிட்டதுபோல், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தையும் தடுத்திட முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர். தொடர்ந்து, வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள ராட்சத ஆழ்குழாய் கிணறுகளை முத்தரசன் பார்வையிட்டார்.
மத்திய அரசு இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, புதுகை புதிய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை, இரா. முத்தரசன் தொடங்கி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT