தமிழ்நாடு

குளங்களைக் காக்க திரண்ட மாணவர்கள்: பேரூர் குளத்தில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றம்

தினமணி

கோவையில் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள், மாணவர்கள் திரண்டதைப் போலவே, தற்போது நீர்நிலைகளைப் பாதுகாக்கவும் திரண்டுள்ளனர். இவர்களின் முதல் முயற்சியின் பலனாக, பேரூர் பெரிய குளத்தில் இருந்த சீமைக் கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டது.

சீமைக் கருவேல மரம் தமிழகம் முழுவதும் பல்கிப் பெருகி சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீர்மட்டத்துக்கும், வேளாண் தொழிலுக்கும் பெரும் எதிரியாக உருவெடுத்துள்ளது. அதை முற்றுலும் அழிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

இதையடுத்து, சீமைக் கருவேல மரங்களை 13 மாவட்டங்களில் உடனடியாக அகற்றி, அந்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை மாவட்டத்தில் மேற்கொண்ட ஆய்வில் கோவை வடக்கு, பேரூர், மதுக்கரை, அன்னூர், மேட்டுப்பாளையம், சூலூர், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய 8 வட்டங்களில் மொத்தம் 2,530 ஏக்கரில் சீமைக் கருவேல மரங்கள் இருப்பது தெரிய வந்தது.

அவற்றை அகற்ற அரசுக்கு சுமார் ரூ. 4.25 கோடி செலவாகும் என்றும், அகற்றப்படும் மரங்களை விற்பனை செய்தால் ரூ.2.81 கோடி வருவாய் கிடைக்கும் என்றும் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

திரண்ட இளைஞர்கள்:
இந்நிலையில், கோவை பேரூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் சிலர் கோவை குளங்கள் பாதுகாப்பு என்ற புதிய அமைப்பைத் தொடங்கி சீமைக் கருவேல மரங்களை அகற்றியுள்ளனர்.

அதன்படி, சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் புதர் மண்டியும், நீர் வழங்கும் வாய்க்கால்கள் தூர்ந்துபோன நிலையிலும் இருக்கும் பேரூர் பெரிய குளத்தை சீரமைக்க முடிவு செய்த இவர்கள், அதற்காக பொதுப் பணித் துறையின் அனுமதியை பிப்ரவரி 9-ஆம் தேதி பெற்றனர்.

பின்னர், இதற்கான பணி பிப்ரவரி 12-இல் தொடங்கும் என்று முகநூல், கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் தகவலைப் பரப்பினர். திட்டமிட்ட நாளில் இளைஞர்கள் திரண்டு பணிகளைத் தொடங்கினர்.

விடுமுறை நாளில் மட்டுமின்றி அனைத்து நாள்களிலும் பணி நடைபெற வேண்டும் என்பதாலும், சீமைக் கருவேல மரங்களை வேருடன் அழிக்க வேண்டும் என்பதற்காகவும், கால்வாய்களை தூர்வாருவதற்காகவும் இயந்திரங்கள் தேவைப்படுவதை அவர்கள் உணர்ந்தனர்.

அதேநேரம், மாணவர்கள், இளைஞர்களின் ஆர்வத்தை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தன்னார்வலர்கள் பலரும் தாமாகவே முன்வந்து இயந்திரங்களுக்கான செலவை ஏற்றுக் கொண்டனர். ஒருங்கிணைந்த இந்த முயற்சியால், 11 நாள்கள் பணி நடைபெற்ற நிலையில், பேரூர் குளத்தில் இருந்து சீமைக் கருவேல மரங்கள் தற்போது முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன.

பெருகி வரும் ஆதரவு:
தொடக்கத்தில் 30 பேருடன் தொடங்கிய இந்த இயக்கத்துக்கு, நாளுக்கு நாள் மாணவர்கள், இளைஞர்களின் ஆதரவு பெருகிய நிலையில் தற்போது பெண்கள், முதியவர்கள் என 150 பேராக உயர்ந்திருப்பதாகக் கூறுகிறார் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகி ஆர்.மணிகண்டன்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:
பேரூர் பெரிய குளம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு முழுமையாக நிரம்பியது. அதன் பிறகு தூர்வாரப்படாதது, நீர்வழித் தடங்களில் முட்புதர்கள் மண்டியது போன்றவற்றால் நீர்வரத்து இல்லாமல் போனது. மேலும், பேரூர் பகுதி குப்பைகள் கொட்டப்பட்டதால் குளமெங்கும் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்திருந்தது.

கடந்த 2 ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற இளைஞர்களின் களப் பணியால் பிளாஸ்டிக் குப்பைகள் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளன. வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 26) 250 இளைஞர்கள் களப் பணிக்கு வருவதாக முன்பதிவு செய்துள்ளனர். இதைத் தவிர, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்து தொடர்பு கொள்ளும் தமிழர்கள், நிதியுதவி அளிப்பதாகக் கூறுகின்றனர்.

அதுபோன்றவர்களிடம், இங்கு பணியாற்றும் பொக்லைன் உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு பேச வைத்து, கூலியை அவர்கள் மூலமே வழங்கச் செய்கிறோம். இதன் மூலம் தேவையற்ற பிரச்னைகள் உருவாவதைத் தவிர்த்து விடுகிறோம். குளத்தில் பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில், இனி 11 கி.மீ. தூரம் உள்ள வாய்க்காலை முழுவதுமாக தூர்வாரி சீரமைக்க உள்ளோம்.

இதன் மூலம் வரும் மழைக் காலத்தில் பேரூர் பெரிய குளத்தில் நீர் நிரம்பி, பேரூர், கோவைப்புதூர், குனியமுத்தூர் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை உருவாகியிருக்கிறது. மேலும், பெரிய குளத்தைத் தொடர்ந்து செங்குளத்தையும் சீரமைக்க உள்ளோம் என்றார்.

இளைஞர்கள், மாணவர்களின் ஒருங்கிணைந்த முயற்சியின் பலனாக மாவட்டத்திலேயே சீமைக் கருவேல மரம் முற்றிலும் அகற்றப்பட்ட முதல் குளம் என்ற பெயர் பேரூர் பெரிய குளத்துக்கு கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT