தமிழ்நாடு

புதுச்சேரியில் முழு அடைப்பு: தமிழக பேருந்து கண்ணாடி உடைப்பு; இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிப்பு!

DIN

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் ஜனநாயக விரோதப் போக்கு மற்றும் மத்திய பாஜக அரசை கண்டித்து, புதுச்சேரி மாநிலத்தில் இன்று சனிக்கிழமை (ஜூலை 8) நடைபெறும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்காததால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

மக்களாட்சிக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் - பாஜகவைச் சேர்ந்தவர்களை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அண்மையில் அவர்களுக்கு ரகசியமாக ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதற்கு ஆளும் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் கிரண்பேடிக்கு எதிராக காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இதைத்தொடர்ந்து முழு அடைப்பு போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. இதன் காரணமாக அரசு, தனியார் பஸ்கள் இயங்கவில்லை. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அதேநேரத்தில் தமிழக அரசு பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இதனிடையே புதுச்சேரியில் அந்தோணியார் கோயில் அருகே தமிழக பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சென்ற அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடியை மர்மநபர்கள் உடைத்தனர்.

இந்நிலையில், கிரண்பேடி மற்றும் மோடியின் உருவ பொம்மையை எரித்து காங்கிரஸார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் முழு அடைப்பு நடைபெறுவதையொட்டி ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொப்பூா் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

பென்னாகரத்தில் இடியுடன் கூடிய கனமழை

வாகன புகைப் பரிசோதனை மையங்களில் வழிமுறைகளைப் பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை

காவிரி ஆற்றில் மூழ்கிய தனியாா் நிறுவன ஊழியா் பலி

SCROLL FOR NEXT