தமிழ்நாடு

48 மணி நேரத்துக்குள் ஜாதி சான்றிதழ் வழங்கப்படும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு

DIN

பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 48 மணி நேரத்தில் ஜாதி சான்றிதழ் வழங்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவித்தார்.
பேரவையில் திங்கள்கிழமை வருவாய்த் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட அறிவிப்புகள்:
2017-18- ஆம் நிதியாண்டில் 3.50 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் வழங்கப்படும்.
இணையம் மூலம் சான்றிதழ்: விவசாய வருமானச் சான்றிதழ், சிறு,குறு விவசாயி சான்றிதழ், கலப்புத் திருமணச் சான்றிதழ், விதவைச் சான்றிதழ், வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி, கல்லூரி சான்றிதழ்களின் நகல் சான்றிதழ், ஆண்குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ், திருமணமாகாதவர் என்பதற்கான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், வசிப்பிடச் சான்றிதழ், சொத்துமதிப்பு சான்றிதழ், அடகு வணிகர் உரிமம், கடன் கொடுப்போர் உரிமம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஜாதி சான்றிதழ் போன்றவற்றை இணையதளம் மூலம் பெறலாம்.
48 மணிநேரத்தில் ஜாதி சான்றிதழ்: பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் அவர்களின் குடும்பத்தில் எவரேனும் ஏற்கெனவே இணையவழி மின்னணு சேவை மூலம் ஜாதி சான்றிதழ் பெற்றிருந்தால், அதன் விவரத்துடன் இ- சேவை மையங்கள் மூலமாக விரைவு சேவை கட்டணமாக ரூ.250 செலுத்தி விண்ணப்பிக்கும் பட்சத்தில், விண்ணப்பித்த நேரத்திலிருந்து 48 மணி நேரத்துக்குள் ஜாதி சான்றிதழ் வழங்கப்படும்.
வான்வழி ஆய்வு: வெள்ளத்தினால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கும் ஆற்றுப்படுகைகள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளைச் சரியாகப் பராமரிப்பதற்கும், நீர்வழி பாதைகளைத் துல்லியமாக கண்டறிவதற்கும் அணை கட்டுவதற்கான இடங்களைத் தேர்வு செய்வதற்கும்,பேரிடர் காலத் தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வசதியாக ரூ.7.01 கோடி செலவில் வானூர்தி மூலம் வான்வழி புகைப்படவியல் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
பேரிடர் கால பணிகளான தடுப்பு, தணிப்பு, ஆயத்த நிலை, மீட்பு, நிவாரணம் மற்றும் மீளுதல் போன்றவற்றுக்கு மாதிரியினை உருவாக்கிட அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப உதவியுடன் புவிசார் தகவல் பிரிவானது ரூ.7.50 கோடி செலவில் உருவாக்கப்படும். பேரிடர்களை எதிர்கொள்ள பல்துறை நிபுணர்கள் நியமிப்பது மற்றும் வறட்சி கண்காணிப்பு மையங்களை அமைக்க ரூ.2.50 கோடி செலவிடப்படும்.
நிவாரணப் பணிகளில் ஈடுபடும் பல்வேறு துறையினரின் திறன்களை மேம்படுத்திட மாநில பேரிடர் நிவாரண நிதியின்கீழ் ரூ.5 கோடி செலவில் பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படும்.
நில அளவர் நியமனம்: நில அளவை பதிவேடுகள் துறையில் காலியாக உள்ள 422 நில அளவர் பணியிடங்களும், 328 வரைவாளர் பணியிடங்களும் மற்றும் 28 அமைச்சுப் பணியாளர்கள் பணியிடங்களும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் விரைவில் நிரப்பப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT