தமிழ்நாடு

பாஜகவின் பினாமி அரசாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்படுகிறது: மு.க. ஸ்டாலின்

DIN

சென்னை: மத்திய பாஜகவின் பினாமி அரசாக தமிழக அரசு நடந்து வருவதாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"கடுகளவும் தமிழக மக்களுக்குப் பலன் தராத ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதுக்கோட்டையில் அரசு மருத்துவமனை திறப்புவிழாவில் பேசும்போது, தனது தலைமையிலான ஆட்சி பினாமி ஆட்சியல்ல என்றும், மெஜாரிட்டி பலம் கொண்ட நிரந்தரமான ஆட்சி என்றும் தெரிவித்திருப்பதுடன், திமுகதான் மைனாரிட்டி ஆட்சியை நடத்தியது என்றும் பேசியிருக்கிறார்.

குற்றவாளியின் பினாமி அரசாகத்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவியேற்றது என்பதை தமிழக மக்கள் அறிவார்கள். அந்த பினாமி தன்மையில் கூட நிரந்தரமாக இல்லாமல், தற்போது மத்தியில் ஆளும் பாஜகவின் பினாமி அரசாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மாறியிருக்கிறது.

இந்த உண்மையை மறைக்க முயன்று, 5 ஆண்டுகாலம் நிரந்தரமாக ஆட்சி செய்த திமுகவை நோக்கி மைனாரிட்டி அரசு என்று அவர் வசைபாடுகிறார்.

திமுக அரசு மைனாரிட்டி அரசு என்றால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து வீழ்த்தியிருக்கலாமே? அதிமுகவால் அதைச் செய்ய முடிந்ததா? மக்களின் பேராதரவு என்கிற உண்மையான மெஜாரிட்டியுடன் தமிழகத்தின் நலன்காக்கும் திட்டங்களை நிறைவேற்றியதுதான் கருணாநிதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற திமுக அரசு என்பதை முதல்வருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

நிரந்தர முதல்வர் என்று புகழ்பாடுவது அதிமுகவிற்குப் புதிதல்ல, வழக்கமாக நடப்பதுதான். ஆனால், ஓராண்டு ஆட்சி காலத்தில் 3 முதல்வர்களைக் கண்டிருக்கிறது இந்த ’நிரந்தர’ அரசு. இதனால் மக்களுக்கு கிடைத்திருக்கும் பலன் என்ன? தமிழக அரசு திவாலாகும் அளவிற்கு 3 லட்சம் கோடி ரூபாய் நேரடிக் கடன் சுமையை உண்டாக்கியது மட்டுமே ’நிரந்தர’ ஆட்சியாளர்கள் என நினைத்து, புகழ்பாடித் திரிபவர்களின் மாபெரும் சாதனையாக உள்ளது.

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்த மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களின் நிர்வாகத்தில் ஆரம்பித்த சீரழிவு, அடுத்து வந்த பினாமி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியிலும், தற்போது ஆட்சி நடத்தும் பினாமி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும், மென்மேலும் வளர்ந்தபடியே இருக்கிறது.

இவர்களின் ’நிரந்தர’ ஆட்சியால், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குகோரும், தமிழக சட்டமன்றத்தின் ஒருமித்த தீர்மானத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற முடியவில்லை. இங்கு மட்டுமா, ’இந்திய நாடாளுமன்றத்திலும் ஏறத்தாழ 50 எம்.பிக்களை வைத்திருக்கிறோம்’, என்று பெருமை பேசும் இவர்களால், அதை பயன்படுத்தியாவது நீட் தேர்விலிருந்து விலக்களிக்கும் மசோதாவுக்கு சட்ட அங்கீகாரம் பெற முடிந்ததா?

இறைச்சிக்காக மாடுகள் விற்பனைக்குத் தடை விதிக்கும் மத்திய அரசின் சட்டத்தினை எதிர்த்து, பக்கத்தில் உள்ள கேரள மாநிலத்தில் புதிய சட்டத்தை அம்மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றி இருக்கிறார் கேரள முதல்வர் பினரயி விஜயன். ஆனால் இங்கு மெஜாரிட்டி பலத்துடன் ஆள்கிறோம் என்று சொல்பவர்கள் அதுபோன்ற எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்றாதது மட்டுமல்ல, மாநில சுயாட்சிக்கு சவால் விடும் வகையில், மாநில அரசின் அதிகாரத்தின்கீழ் உள்ள சட்டத்தில், மத்திய அரசு மேலாதிக்கம் செலுத்துகிற நிலையில், அதைப் பற்றி வாய் திறக்கும் துணிச்சல் கூட இன்றி மவுனம் காத்து வருகிறார்கள்.

இறைச்சிக்காக மாடுகள் விற்பனைக்குத் தடை விதிக்கும் மத்திய அரசின் சட்ட திருத்தம் வெளியிடப்பட்டு 4 நாட்கள் கழித்து, அதைப் படித்துப் பார்த்துதான் முடிவெடுக்க முடியும் என்ற தமிழகத்தின் பினாமி முதலமைச்சர் தற்போது வரை அதனைப் படித்துப் பார்க்க நேரமில்லாமலும், படிப்பதற்கான மனமில்லாமலும் இருக்கிறார் போலும்.

தமிழக ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் 400க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிர்கள் தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணங்களால் பறிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகும் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யவோ, அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவி செய்யவோ எந்த நடவடிக்கையையும் இந்த அரசாங்கம் எடுக்கவில்லை.

விவசாயிகளின் நலன் காக்க டெல்லி வரை சென்று உறுதியானப் போராட்டங்களை முன்னெடுத்த அய்யாகண்ணு அவர்கள் தலைமையிலான விவசாய அமைப்பினர், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, கடந்த இரண்டு நாட்களாக சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்திவரும் நிலையில், அவர்களை ஊடகத்தினர் சந்தித்துப் பேசக்கூட அனுமதிக்காமல் காவல்துறையின் மூலம் கெடுபிடி காட்டுகிறது இந்த பினாமி அரசு.

தமிழகத்தின் ஆணிவேராக விளங்கும் விவசாயப் பெருமக்களின் நலன்களைப் புறக்கணிக்கும் ஆட்சிக்குப் பெயர்தான் மெஜாரிட்டி ஆட்சியா? நிலையான ஆட்சியா? மெஜாரிட்டி பலம் இருப்பதாகச் சொல்லிக்கொண்டு, தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் எதிலும் கவனம் செலுத்தாமல், மத்திய பாஜக அரசின் மூன்றாண்டு சாதனைகளை மலராக வெளியிட்டு, அதனை விளம்பரப்படுத்தும் மாநில அரசை பினாமி அரசு என்று சொல்வதுதானே பொருத்தமாக இருக்கும்!

மக்கள் விரோத பினாமி ஆட்சியை நிரந்தர ஆட்சி என பெருமை பேசும் ஆட்சியாளர்கள் தமிழக மக்களின் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றும் திறனின்றி செயலிழந்து கிடக்கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பேச்சில், இது பினாமி அரசு, சுனாமி அரசு, ஜெராக்ஸ் அரசு என்று விமர்சிப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். மத்திய ஆட்சியாளர்களின் பினாமியாகவும், தமிழகத்தைப் பேரழிவுக்குள்ளாக்கும் சுனாமியாகவும், கடன்சுமையை அதிகரிப்பதில் ஜெயலலிதா ஆட்சியின் ஜெராக்ஸாகவுமே இந்த அரசு நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்ட ஆட்சியைத்தான் நிரந்தர அரசு என்கிறார்கள்.

கிணற்றில் போட்ட கல் கூட அசைவின்றி, நிரந்தரமாக ஒரே இடத்தில்தான் கிடக்கும். அதுபோன்ற நிலையில்தான் இருக்கிறது இந்த பினாமி அரசு என்பதை தமிழக மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். விரைவில் அதனை ஆட்சியாளர்களுக்கு புரிய வைக்கவும், பாடம் கற்பிக்கவும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்" என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

, , ,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT