தமிழ்நாடு

ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்று நூல்: முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்

DIN

ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது திருஅவதார விழாவையொட்டி, அவரது வாழ்க்கை வரலாற்றை மூன்று மொழிகளில் விளக்கும் 'இராமானுஜர் வைணவ மாநிதி' நூல் வெளியீட்டு நிகழ்ச்சி, தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நூலினை வெளியிட, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
ஸ்ரீ வைணவ ஆச்சார்யர்களில் தலைசிறந்தவரான ஸ்ரீ ராமானுஜர் கி.பி. 1017 -ஆம் ஆண்டு, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார். ஸ்ரீ ராமானுஜர் கி.பி.1051 -ஆம் ஆண்டில் பிரம்மசூத்திரத்துக்கான ஸ்ரீபாஷ்யம் உரை எழுதியதோடு, விசிஷ்டாத்வைதம் என்னும் இறை தத்துவத்தையும் உருவாக்கினார். இந்து மதத்தில் காணப்பட்ட ஜாதிப் பாகுபாடுகளை களைவதற்கான சமூக சீர்திருத்தங்களைச் செய்த இவர், வேதாந்த சங்ரகம், வேதாந்த தீபம், கீதா பாஷ்யம் போன்ற வைணவ சமயம் சார்ந்த நூல்களை இயற்றியுள்ளார்.
சிறந்த நிர்வாகி: ஸ்ரீ ராமானுஜர் சிறந்த வேதாந்தி மட்டும் அல்ல; சிறந்த நிர்வாகியும் ஆவார். ஸ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று, அதை முற்றிலும் சீர்படுத்தினார். கி.பி. 1089 முதல் 1095 வரை இந்தியா முழுவதும் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு வைணவத்தின் பெருமையை எங்கும் பறைசாற்றினார்.
தாழ்த்தப்பட்ட மக்களிடம்...தாழ்த்தப்பட்ட மக்களிடம் அன்பை பொழிந்து அவர்களை திருக்குலத்தார் என்று அழைத்தார். தமிழ் பிரபந்தங்களை ஓதவும், வைணவச் சின்னங்களை தரிக்கவும், ஆண்-பெண் பேதமின்றி அனைத்து ஜாதியினரும் வைணவத்தை தழுவவும் செய்தார். ஸ்ரீ ராமானுஜர் 120 -ஆவது வயதில் முக்தியடைந்தார்.
மணிமண்டபம் அமைக்கும் பணி: சட்டப்பேரவை விதி 110-ன் கீழ், ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூரில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி ஸ்ரீபெரும்புதூர், அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் பாஷ்யக்கார சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 2 ஏக்கர் 77 சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.6 கோடி செலவில் மணிமண்டபம் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நூல் வெளியீடு: ஸ்ரீ ராமானுஜரின் 1000 -ஆவது திருஅவதார விழா ஸ்ரீபெரும்புதூர், அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் பாஷ்யக்கார சுவாமி திருக்கோயிலில் கடந்த 22 -ஆம் தேதி முதல் மே 2 -ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.86 லட்சம் செலவில் கோயிலில் முழுமையான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், பக்தர்களுக்காக குடிநீர், போக்குவரத்து, தங்குமிடம், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டன.
ஸ்ரீ ராமானுஜரின் 1000-வது திருஅவதார விழாவையொட்டி, கடந்த 2 -ஆம் தேதி, தமிழகம் முழுவதும் உள்ள 54 திவ்ய தேச திருக்கோயில்களிலிருந்தும் ஸ்ரீ ராமானுஜருக்கு மாலை மற்றும் வஸ்திர மரியாதை செலுத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, அவரது வாழ்க்கை வரலாற்றை வண்ணப்படங்களுடன் தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கில மொழிகளில் விளக்கும் 'இராமானுஜர் வைணவ மாநிதி' என்ற புத்தகத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மா.வீர சண்முகமணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT