தமிழ்நாடு

மலேசிய மணலை அனுமதியின்றி தமிழகத்தில் விற்க முடியாது: உயர் நீதிமன்றத்தில் அரசு பதில்

DIN

மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை தமிழகத்தில் அரசு அனுமதியின்றி விற்பனை செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலைச் சேர்ந்த எம்ஆர்எம் ராமையா எண்டர்பிரைசஸ் நிறுவனம், மலேசியாவில் இருந்து 53,334 மெட்ரிக் டன் மணலை இறக்குமதி செய்தது. இந்த மணல்தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதில் 96 டன் மணலை 6 லாரிகளில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் கொண்டு சென்றபோது, தமிழக கனிமவளச் சட்டப்படி தனியார் மணல் விற்பனை செய்ய முறையான அனுமதி பெறவில்லை எனக் கூறி, வருவாய் அலுவலர்கள் லாரிகளை பறிமுதல் செய்தனர். மேலும், தூத்துக்குடி, துறைமுகத்தில் இருந்து மணலை வெளியே எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள மணலை விடுவிக்க உத்தரவிடக்கோரி, மணல் இறக்குமதி செய்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்ஆர்எம் ராமையா, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், 'மணலை வெளியே எடுக்க முடியாததால் கடந்த அக்டோபர் 28 -ஆம் தேதி முதல் துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மணலுக்கு வாடகையாக நாளொன்றுக்கு ரூ.2 லட்சம் செலுத்தி வருகிறோம். இதனால் எங்கள் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே இறக்குமதி செய்த மணலை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கவும், லாரிகளை எங்களிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். 
இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'தமிழகத்தில் மணலை விற்பனை செய்ய முறையான அனுமதி பெறவில்லை. இது சட்டவிரோதமானது. எனவே தான் மணலை துறைமுகத்தை விட்டு வெளியே எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் வாதிடுகையில், 'நாங்கள் மத்திய அரசின் அனுமதியுடன், சட்டரீதியாக ஜிஎஸ்டி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் முறையாக செலுத்தி மணலை இறக்குமதி செய்துள்ளதால் சட்டவிரோதம் எனக்கூறுவதை ஏற்க முடியாது' என்றார்.
மேலும், 'தூத்துக்குடி துறைமுகத்தில் இருக்கும் மணலை தமிழகத்தில் விற்பனை செய்ய அனுமதிக்காதபட்சத்தில், அதை கேரளத்திற்கு கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும்' எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். இதை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை புதன்கிழமைக்கு (நவம்பர் 15) ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

SCROLL FOR NEXT