தமிழ்நாடு

அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துவதை தமிழக ஆளுநர் தவிர்க்க வேண்டும்! அன்புமணி வலியுறுத்தல்

DIN

அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துவதை தமிழக ஆளுனர் தவிர்க்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோவையில் பாரதியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கச் சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அம்மாவட்ட அதிகாரிகளை அழைத்து அங்கு செயல்படுத்தப்படும்  திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தியிருக்கிறார். ஆளுநரின் செயல், திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கம் கொண்டதாக இருந்தாலும் கூட, மாநில அரசின் அதிகாரத்தில் குறுக்கிடும் செயலாகும்.

ஒரு மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆளுநர் தான். ஆனாலும் கூட இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி ஆளுநர் என்பவர் மத்திய அரசால் அதன் பிரதிநிதியாக நியமிக்கப்படுபவராவார். ஆனாலும், அவருக்கு தனித்த அதிகாரம் என்று எதுவும் வழங்கப்படவில்லை. முதலமைச்சரை ஆளுநர் தான் நியமனம் செய்வார். அமைச்சர்கள், உயர் நீதிமன்ற தலைமை வழக்கறிஞர், அரசு பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட சட்டப்பூர்வ அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என்றாலும், அவற்றை அமைச்சரவையின் பரிந்துரைப்படி தான் ஆளுநரால் செய்ய முடியும்.

ஒரு மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கலைக்கப்பட்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 160, 356, 357 ஆகிய பிரிவுகளின் கீழ் ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டும் தான்  அவரால் மாநில அரசின் அதிகாரத்தில் தலையிட முடியும். அத்தகைய அதிகாரம் வழங்கப்படாத நிலையில் ஆளுநரால் அரசு அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தவோ, பணிகளை ஆய்வு செய்யவோ அதிகாரம் இல்லை. மாநில அரசின் செயல்பாடுகள் குறித்து ஆளுநருக்கு விளக்கம் தேவை என்றால் மாநில முதலமைச்சரை நேரில் அழைத்துக் கோரலாம் அல்லது தலைமைச் செயலாளர் மூலம் அறிக்கையாக கேட்டுப் பெறலாம். அவ்வாறு செய்யாமல் மாவட்டத் தலைநகருக்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளை அழைத்து வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இன்னும் வழங்கப்படவில்லை. அவ்வகையில் கோவையில் ஆளுநர் ஆய்வு செய்தது மாநில அரசின் அதிகாரத்தில் குறுக்கிடும் செயலே.

தமிழ்நாடு சந்திக்கும் ஆளுநர்கள் மிகவும் வித்தியாசமானவர்களாக இருக்கிறார்கள். இதற்கு முன் ஆளுநராக இருந்த ரோசய்யாவிடம் தமிழக அரசு மீதான ஊழல் குற்றச்சாற்றுகளை 209 பக்கங்கள் கொண்ட ஆதாரங்களுடன் கூடிய புகார் மனுவை பாட்டாளி மக்கள் கட்சி 17.02.2015 அன்று நேரில் வழங்கியது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 167(பி) பிரிவின்படி ஊழல் புகார்கள் குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கும் அதிகாரம் ஆளுனருக்கு உண்டு. ரோசய்யாவுக்கு இருந்த அதிகாரத்தை செயல்படுத்த மறுத்தார். பன்வாரிலால் அவருக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தத் துடிக்கிறார். 

தமிழகத்தை சேர்ந்த இரு அமைச்சர்கள்  கோவையில் இருந்தும் அவர்களை ஆளுநர் கூட்டத்துக்கு அழைக்கவில்லை. ஆனாலும், இந்த அவமானத்தைத் தாங்கிக் கொண்டு, ஆளுநரின் செயல்பாடுகள் மாநில அரசின் தன்னாட்சிக்கு ஆபத்தானவை அல்ல என்று அவர்கள் கூறியிருப்பது தான் கொடுமை. ஆளுநரின் செயல் அதிகார உரிமையை பறிக்கும் செயலென்றால், அமைச்சர்களின் செயல்பாடுகள்  அரசின் அதிகாரத்தை தாரை வார்க்கும் செயலாகும். இந்த இரு செயல்களுமே ஏற்கமுடியாதவையாகும்.

மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் என்பது முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள அதிகாரமல்ல... அது அரசுக்கான அதிகாரம் ஆகும். அந்த அதிகாரத்தை ஆளுநருக்கு  அமைச்சர்கள் தாரை வார்க்க முடியாது. இதனால் தேவையற்ற குழப்பங்கள் தான் ஏற்படும். எனவே,  ஆளுநர், ஆட்சியாளர்களும் அவரவர் அதிகார எல்லைக்குள் இருந்து மக்கள் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT