தமிழ்நாடு

வாக்கி - டாக்கி கொள்முதல்: சிபிஐ விசாரணை தேவை

DIN

தமிழக காவல்துறைக்கு வாக்கி - டாக்கி கொள்முதலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: காவல்துறையில் வாக்கி - டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது குறித்து 11 கேள்விகளை எழுப்பி, தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி கடிதம் எழுதியுள்ளார்.
நிகழாண்டில் காவல்துறையை நவீனமாக்கும் திட்டத்தின்படி ரூ.47.56 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதைக் கொண்டு 10 ஆயிரம் வாக்கி - டாக்கிகள் வாங்கப்பட வேண்டும். ஆனால், அனுமதிக்கப்பட்ட தொகைக்கு மாறாக ரூ.83.45 கோடிக்கு ஒரு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் 4 ஆயிரம் வாக்கி - டாக்கிகளுக்கு மட்டும் இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஒதுக்கிய நிதியில் வாக்கி-டாக்கி ரூ.47,560 என்ற விலையில் வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒரு வாக்கி - டாக்கி ரூ.2.08 லட்சம் என்ற விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள நிறுவனத்துக்கு அடிப்படைத் தகுதியான தகவல் தொடர்புக் கருவிகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான உரிமம் கூட இல்லை. அந்த உரிமத்தை 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் வாங்கித் தருவதாக உத்தரவாதம் அளித்ததை ஏற்று இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. 
காவல்துறைக்கு வாக்கி - டாக்கி வாங்குவதென்பது தகவல் தொடர்பு சார்ந்த விஷயம் மட்டுமல்ல, மாநிலத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதாகும். இந்த விஷயத்தில் மிகவும் கவனமாகச் செயல்படாமல் அடிப்படைத் தகுதிகள் கூட இல்லாத நிறுவனத்துக்கு விதிகளை மீறி ஒப்பந்தம் வழங்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. எனவே, காவல்துறைக்கு வாக்கி - டாக்கி கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT