தமிழ்நாடு

திருச்சி மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: கணக்கில் வராத ரூ. 2.46 லட்சம் பறிமுதல்

DIN

லஞ்சப் புகார் எதிரொலியாக, திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனையிட்டனர். இதில், கணக்கில் வராத ரூ. 2.46 லட்சம் ரொக்கம், தங்கக் காசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் தீபாவளியை முன்னிட்டு அதிகப்படியாக லஞ்சப் புழக்கம் இருப்பதாகவும், வேலைகளுக்கு அதிகளவில் கமிஷன் கேட்பதாகவும் புகார்கள் வந்தன. மேலும், திங்கள்கிழமை மட்டும் பல்வேறு வேலைகளுக்கு ஒரே நாளில் பணப்பட்டுவாடா செய்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு அதிகளவில் லஞ்சம் வாங்குவதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் 4 ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர், திருச்சி மாநகராட்சி கணக்குப் பிரிவு அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை சோதனையிட்டனர். மாலை 4.30 மணிக்குத் தொடங்கிய சோதனை இரவு 8.30 மணியைத் தாண்டியும் நடைபெற்றது. இதில், கணக்கில் வராத தங்கக் காசுகள், ரொக்கம், ஆவணங்கள் பலவும் கைப்பற்றப்பட்டன.
இதுகுறித்து ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியது:
திருச்சி மாநகராட்சி கணக்குப் பிரிவு அலுவலகத்தில் உதவி ஆணையர் (கணக்குப் பிரிவு) பிரபு குமார் ஜோசப் உள்ளிட்டோர் மீது வந்த லஞ்சப் புகாரையடுத்து சோதனை மேற்கொண்டோம். சோதனையில், குடிநீர் நிதி, புதை சாக்கடை நிதி, வருவாய் நிதி, மூலதன நிதி ஆகிய 4 பிரிவுகளின் கீழ், திங்கள்கிழமை ஒருநாள் மட்டும் ஒப்பந்ததாரர்களுக்கு 33 காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. 
இவற்றுக்கு கமிஷனாக லட்சக்கணக்கில் ரொக்கமும், தங்கக் காசுகளும் லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான தகவலின் பேரில், சோதனையிட்டதில் உதவி ஆணையர் பிரபு குமார் ஜோசப், இளநிலை உதவியாளர் ராம்குமார், ஓய்வுபெற்ற மாநகராட்சி அலுவலர் தங்கராஜ், உதவி ஆணையரின் ஓட்டுநர் ராஜேந்திரன் ஆகிய 5 பேரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 1,36,560 ரொக்கம், 42 கிராம் எடையுள்ள ரூ. 1,19,700 மதிப்பிலான 32 தங்கக் காசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தொடர் விசாரணைக்குப் பிறகு மேற்கண்டவர்கள் மீது வழக்குப் பதிந்து, தேவைப்பட்டால் கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். முழு விசாரணைக்குப் பிறகே எந்த முடிவையும் தெரிவிக்க இயலும் என்றனர்.
லஞ்சப் புகாரில் சிக்கிய கணக்குப் பிரிவு அலுவலகம்
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தின் 2-ஆவது தளத்தில் உதவி ஆணையர் (கணக்குப் பிரிவு) அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு உதவி ஆணையராக பிரபு குமார் ஜோசப்பும், அவருக்குக் கீழ் 2 கண்காணிப்பாளர்கள், 3 உதவியாளர்கள், 3 இளநிலை உதவியாளர்கள், 3 அலுவலக உதவியாளர்கள், அலுவலக உதவிக்காக ஒரு ஓய்வுபெற்ற அலுவலர், ஒரு கணினி பதிவாளர், ஓட்டுநர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். 
மாநகராட்சி மேற்கொள்ளும் எந்த ஒரு பணியாக இருந்தாலும், அதை கணக்கெடுப்பது, ஒப்பந்தப் புள்ளி தயாரிப்பு, ஒப்பந்தப் புள்ளி கோருதல், பணி முடிந்த பிறகு பணம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள், மாநகராட்சி கணக்குப் பிரிவின் வழியாகவே மேற்கொள்ளப்படுகின்றன. இங்குதான் அதிகளவிலான லஞ்சம் வாங்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. 
லஞ்சமாக தங்கக் காசுகள்
லஞ்சப் புகார் எதிரொலியாக திருச்சி மாநகராட்சி கணக்குப் பிரிவு அலுவலகத்திற்கு மாலை 4.30 மணிக்கு சோதனைக்கு வந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள், இரவு 8.30 மணியைத் தாண்டி 4 மணி நேரத்துக்கும் மேலாக சோதனையிட்டு, அங்கிருந்த அலுவலர்களிடம் துருவித்துருவி விசாரித்தனர். இதில், பெண் அலுவலர்கள் 7 பேர் மாலை 6.30 மணி அளவில் வெளியில் அனுப்பப்பட்டனர்.
இளநிலை பொறியாளர் அளவிலான பெண் ஒருவரை போலீஸார், வீட்டிற்கு சென்று அழைத்துவந்து விசாரித்தனர். இவரிடமும், அலுவலகத்திலும்தான் ரூ. 1,19,700 மதிப்பிலான 32 தங்கக் காசுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகை இனாமாக தங்கக் காசுகள் வாங்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது என போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT