தமிழ்நாடு

தார் கொள்முதல் முறைகேடு விவகாரம்: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவு

DIN

சாலைகள் அமைக்க தார் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைப்பெற்றுள்ளதாகக் கூறி, இதுகுறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஜி.பாலாஜி என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "தமிழகத்தில் சாலைகள் அமைக்கும் பணிக்காக தார் கொள்முதல் செய்ததில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களுடன் சேர்ந்து ரூ.1,000 கோடி வரை ஊழல் செய்துள்ளதாகவும், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' எனவும் அவர் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் , எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. 
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர், "இந்த முறைகேட்டில் 41 மண்டல அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 19 பேர் ஓய்வுபெற அரசு அனுமதியளித்துள்ளது. மேலும் 16 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் தொடர்புடைய பெரும்பாலான அதிகாரிகள் ஓய்வுபெறும் நிலையில் உள்ளனர். ஆனால், இதுவரை இதுதொடர்பாக திருச்சியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மீது மட்டுமே வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.6 கோடிக்கு மட்டுமே முறைகேடுகள் நடந்துள்ளதாக வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என வாதிட்டார். 
அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர், "மனுதாரரின் குற்றச்சாட்டுக்கள் தவறானவை. தார் கொள்முதலில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை. தாருக்கான பணத்தை ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெறுவதில்தான் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை' என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "இந்த விவகாரம் தொடர்பாக தன்னிச்சையான விசாரணை அமைப்பான லஞ்ச ஒழிப்புத்துறையே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை விசாரணை அறிக்கை வெளியிடப்படாத நிலையில், முறைகேடுகள் நடக்கவில்லை என்று எப்படி கூறுகிறீர்கள்' என கேள்வி எழுப்பினர். மேலும் இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கையை 4 வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT