தமிழ்நாடு

ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு உயர்நீதிமன்றம் தடை

DIN

ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
மதுரை தமிழ்ச்சங்கம் சாலையைச் சேர்ந்த டி.சேகரன் தாக்கல் செய்த மனுவில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர்(ஜாக்டோ-ஜியோ) செப்.7 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். 
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவர். அரசு ஏற்கெனவே நிதிப்பற்றாக்குறையில் உள்ளது. அரசு நிதியை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு மட்டும் பயன்படுத்த முடியாது. 
கூடுதல் ஊதியம் பெறுவதற்காக வேலை நிறுத்தம் என்ற ஆயுதத்தைக் கையில் எடுப்பது தவறு. எனவே ஜாக்டோ ஜியோவின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, போராட்டக்குழுவினருடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசுத்தரப்பு வழக்குரைஞர் தெரிவித்திருந்தார். இதையடுத்து விசாரணையை வியாழக்கிழமை ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இம்மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. 
விசாரணையின்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதிடும்போது, அரசுத்தரப்பில், ஜாக்டோ ஜியோ குழுவினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில், வேலை நிறுத்தத்தை அக். 15-ஆம் தேதி வரை ஒத்திவைப்பதாக சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். ஆனால் ஜாக்டோ ஜியோவில் உள்ள சில அமைப்பினர் மட்டும் தாலுகா மற்றும் மாவட்ட அளவில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார். 
இதையடுத்து, காலவரையற்ற வேலை நிறுத்தத்துக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது. 
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், போராடுவது அடிப்படை உரிமையாகாது என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பினர் தங்களது கோரிக்கைகளை முன்னிறுத்த வேறு வழிகளைக் கையாளலாம். அதை விடுத்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தீர்வாக அமையாது என்றனர். 
மேலும் இதுதொடர்பாக ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட சங்கங்களின் பொறுப்பாளர்கள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை செப்.14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 
மேலும், நீதிமன்றத்தின் உத்தரவு போராட்டத்தில் ஈடுபடுபவர்களைச் சென்றடையும் வகையில் ஊடகங்களில் பரப்புரை செய்ய நடவடிக்கை எடுக்கமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT