தமிழ்நாடு

செந்தில் பாலாஜியின் உறவினர், நண்பர் அலுவலகங்களில் 4-வது நாளாக சோதனை

DIN

கரூரில் செந்தில்பாலாஜியின் உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில் நான்காவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிபாளையத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க இடம் ஒதுக்கப்பட்டது. மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்ட இடம் ஒரே நாளில் வாங்கப்பட்டு, மறுநாளே தானமாக வழங்கியதாக அறிவிக்கப்பட்டதால், அந்த இடம் குறித்து சர்ச்சை எழுந்தது. 
இந்நிலையில், கரூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் பிரபு, வாங்கல் குப்புச்சிபாளையத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க இடம் உகந்தது அல்ல; எனவே, கரூர் நகராட்சிக்கு உட்பட்ட சணப்பிரட்டியில் கல்லூரி அமைக்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.
இவருக்கு எதிராக, இடத்தை தானமாக வழங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் தியாகராஜன் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததையடுத்து, நீதிமன்றம் வழக்கை விசாரித்த பிறகு, வாங்கல்குப்புச்சிபாளையத்தில் ரியல் எஸ்டேட் தொழிலுக்காகவும், பண நோக்குடனும் அரசு மருத்துவக் கல்லூரிக்காக இடம் வழங்கப்பட்டுள்ளது எனக் கூறி, அண்மையில் தியாகராஜன் உள்ளிட்டோர் தொடுத்த வழக்கை ரத்து செய்துவிட்டது. மேலும், சணப்பிரட்டியில் கல்லூரி அமைத்துக்கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டது. இதையடுத்து, தற்போது கல்லூரிக்குக் கட்டடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், வாங்கல் குப்புச்சிபாளையத்தில் இடம் கொடுத்தவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள், அவர்களது வீடுகள், அலுவலகங்கள், நிதிநிறுவனங்கள், ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களில் கடந்த 21-ம் தேதி முதல் திருச்சி, கோவை, மதுரை வருமானவரித் துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
வரி ஏய்ப்பு செய்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து, இந்த சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து 4 நாட்களாக இந்தச் சோதனை நடைபெற்று வருவதால், வருமானவரி ஏய்ப்பு நடந்திருப்பது நிரூபணமாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. 
எந்த அளவிற்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளது, எத்தகைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது குறித்து அதிகாரிகள் தெரிவிக்க மறுப்பதால், சோதனையின் முழு விவரம் இதுவரை தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT