தமிழ்நாடு

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பள்ளி மாணவர்களுக்கு தடை: தமிழக அரசு பதில் மனு! 

DIN

சென்னை: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல இடைக்காலத் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா மதுரை, திருப்பூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, வேலூர், நாமக்கல், நாகை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளது. இந்த விழாக்களில் அதிகமான கூட்டத்தைக் காட்டுவதற்காக அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்கள், அவர்களின் பெற்றோர்களின் அனுமதியைப் பெறாமல், விடுமுறை தினங்களில்கூட வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். இவ்வாறு மாணவர்களை அழைத்துச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி, மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

எனவே, பள்ளி வளாகத்துக்கு வெளியே நடக்கும் அரசு நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், பிரசாரங்களில் பள்ளிக் குழந்தைகளை பங்கேற்க வைக்கும்போது பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் விதிமுறைகளை உருவாக்க தமிழக தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர், தமிழக காவல்துறை டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க கல்வித் துறை அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு, உயர் நீதிமன்ற விடுமுறை கால நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'பள்ளி மாணவர்களை இதுபோன்ற அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது சரியான முறையும் அல்ல, இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது' என தெரிவித்த நீதிபதிகள், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கோ அல்லது அதனுடன் தொடர்புள்ள அரசியல் சார்ந்த விழாக்களுக்கோ பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லக்கூடாது என அரசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். 

அப்பொழுது உடனடியாக அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடையை நீக்க வேண்டும் என  முறையீடு செய்தார். இந்த முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த உத்தரவில் எந்த மாற்றமும் செய்யமுடியாது எனக் கூறி நிராகரித்தனர்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தற்பொழுது பதில்மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டு இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பபடுமென்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT