முகப்பு
தமிழ்நாடு

10 ரயில் நிலையங்களில் விரைவில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டம்

தமிழகத்தில் 10 ரயில் நிலையங்களில், ஒருங்கிணைந்த பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளன. 

Updated On : 6 ஏப்ரல் 2018, 1:33 am IST
பகிர்:

தமிழகத்தில் 10 ரயில் நிலையங்களில், ஒருங்கிணைந்த பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளன. 
அதன்படி கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கையை தேவைக்கேற்ப அதிகரிப்பது, நவீன ஸ்கேனர்களை அமைப்பது , வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் அமைப்பது உள்ளிட்டவை செயல்படுத்தப்படவுள்ளன.
மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்குப் பின் உஷாரான மத்திய அரசு, ரயில் மற்றும் விமான நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் திட்டத்தை துரிதப்படுத்தியது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் கண்டறிந்தனர். இதனையடுத்து, பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான ரயில், விமான நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக முக்கிய ரயில் நிலையங்கள் அனைத்திலும் கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஆனால், சிறு ரயில் நிலையங்களில் பொருத்தும் பணிகள் இன்னும் நடைபெறவில்லை.
இதுவரை 392 ரயில் நிலையங்கள், 278 ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் உதவியுடன் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
இதை மேலும் நவீனப்படுத்தும் வகையிலும், பயணிகள் பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாகவும் மாநிலந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் முக்கிய ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. 
அந்த வகையில் நாடு முழுவதும் 202 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் சென்னை சென்ட்ரல், எழும்பூர், பீச், மாம்பலம், தாம்பரம், பேசின்பிரிட்ஜ், திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை ஆகிய 10 ரயில் நிலையங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் தேவைக்கேற்ற வகையில் அதிக எண்ணிக்கையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, வெடிகுண்டு கண்டறியும் நவீன சாதனங்கள் அமைப்பது, வெடிகுண்டு தடுப்புப் மற்றும் செயல் இழப்பு பிரிவு ஏற்படுத்துவது, உடைமைகளை சோதனையிடும் நவீன ஸ்கேனர்கள் அமைப்பது, பாதுகாப்பு படையினர் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்டவை அடங்கும்.
இது தொடர்பாக கடந்த மார்ச் 23-ஆம் தேதி மாநிலங்களவையில், உறுப்பினர் அஜய் சேன்ஜெடி கேள்விக்கு, ரயில்வே இணை அமைச்சர் ரெஜன் ஹொகைன் அளித்த பதிலில் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். 
இவை தவிர தெற்கு ரயில்வேயில் கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றிலும் ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளன. 
டிஆர்இயு தொழிற்சங்கம் வரவேற்பு: தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் கூறுகையில், இத்திட்டத்தில் கேமரா கண்காணிப்பு, உடைமைகள் மற்றும் சுமைகள் திரையிடல் கண்காணிப்பு 24 மணி நேரமும் மேற்கொள்ளப்படும், வெடிப் பொருள்களை கண்டறியும் கருவி, வெடி பொருள்கள் நீக்கும் பயிற்சியாளர் மற்றும் மோப்ப நாய் இடம்பெறும், கண்காணிப்பு விடியோ பதிவுகள் 30 நாள்கள் வரை சேமிக்கப்படும். ரயில் நிலைய எல்லையை ஒட்டி 6 அடி உயர தடுப்பு வேலி அமைக்கப்படும். மேலும் இத்திட்டம் மூலம் குற்றங்கள் கண்டறியப்படுவதுடன், அவற்றை தடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். எனவே இது வரவேற்கக் கூடிய திட்டம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments