தமிழ்நாடு

பசுமை வழிச்சாலைத் திட்டம்: நில உரிமையாளர்களை வெளியேற்ற நீதிமன்றம் தடை

DIN


சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நில உரிமையாளர்களை அவர்களது நிலங்களிலிருந்து வெளியேற்றக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்துக்கு எதிராக பாதிக்கப்பட்ட நில உரிமையாளர் பி.வி.கிருஷ்ணமூர்த்தி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரும் பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி உள்பட பலர் மனு தாக்கல் செய்துள்ளனர். 
இந்த வழக்குகள் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. கடந்த ஆகஸ்ட் 15-இல் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் இத்திட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், அப்போது பொதுமக்கள் மீது போலீஸார் நடத்திய தடியடியால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்: அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், சென்னை-சேலம் பசுமைவழிச்சாலை திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 
அச்சத்தைப் போக்குவதற்குப் பதில்... அந்தத் துண்டுப் பிரசுரங்களைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், இதில் திட்டம் குறித்து விவசாயிகளின் அச்சத்தைப் போக்கும் வகையில் எந்தத் தகவலும் இடம்பெறவில்லை. மேலும், சென்னை-சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டம் சிறப்பானது எனப் புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது. ஒரு மரத்தை வெட்டினால் பத்து மரம் வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வைக்கப்படும் மரங்கள் முறையாகப் பராமரித்து வளர்க்கப்படுவதில்லை எனக் கருத்து தெரிவித்தனர்.
அப்போது அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், இந்தத் திட்டத்துக்காக நில உரிமையாளர்களை கட்டாயமாக வெளியேற்ற மாட்டோம் என இந்த வழக்கு விசாரணைக்கு வந்த முதல் நாளிலிருந்து தமிழக அரசு சார்பில் விளக்கம் அளித்து வருகிறேன். மேலும், இதுவரை நிலங்கள் உரிமையாளர்களிடம் தான் உள்ளன;
இதுவரை திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்தார். 
நீதிபதிகள் உத்தரவு: இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சென்னை-சேலம் 8 வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்படும் என நிலத்தின் உரிமையாளர்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். தங்களது நிலத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படலாம் என அஞ்சுகின்றனர். தமிழக அரசு அத்தகைய செயலில் ஈடுபடாது என அரசு தலைமை வழக்குரைஞர் விளக்கம் அளித்துள்ளார். 
எனவே, நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிலத்தின் உரிமையாளர்களை அவர்களது நிலங்களிலிருந்து அப்புறப்படுத்தக்கூடாது என மத்திய, மாநில அரசுகளுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது'' என நீதிபதிகள் தெரிவித்தனர்.
வழக்கின் விசாரணையை வரும் செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

1, 2, 3, 4... உங்களுக்குப் பிடித்த படம் எது? சாக்க்ஷி அகர்வால்

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

SCROLL FOR NEXT