அந்நியச் செலாவணி வழக்கு: சசிகலாவை நேரில் ஆஜர்படுத்தும் உத்தரவு ரத்து
அந்நியச் செலாவணி வழக்கில், சசிகலா நேரில் ஆஜராக வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: அந்நியச் செலாவணி வழக்கில், சசிகலா நேரில் ஆஜராக வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமலாக்கப் பிரிவினர் ஜெ.ஜெ. தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் ஆகியோருக்கு எதிராக அந்நியச் செலாவணி மோசடி வழக்குகளைப் பதிவு செய்தனர்.
எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் சசிகலாவுக்கு எதிராக நான்கு வழக்குகள் விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில், கடந்த 2017 ஜூலை மாதம் பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பின், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு எதிராக, காணொலிக் காட்சி வழியாக குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. இதற்குப் பின், அந்த ஆவணத்தில் கையெழுத்திடுவது உள்ளிட்ட சில நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. சசிகலாவுக்கு எதிராக மறு குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக நவம்பர் 30-ஆம் தேதி அவரை ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர் மதி உத்தரவிட்டிருந்தார்.
Advertisement
Advertisement
ஆனால், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் சசிகலாவை ஆஜர்படுத்தவில்லையென பெங்களூரு சிறை நிர்வாகத்தின் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம், சசிகலாவை நேரில் ஆஜர்படுத்துமாறு கர்நாடக சிரைத்துறைக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் அந்நியச் செலாவணி வழக்கில், சசிகலா நேரில் ஆஜராக வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர் மதி உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்றம், சசிகலா நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடன் இந்த வழக்கில் விசாரணையை விடியோ கான்பெரன்ஸிங் முறையில் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள நீதிமன்றம், சசிகலா மற்றும் பாஸ்கரன் மீதான வழக்கினை 4 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.