தமிழ்நாடு

நிலக்கரி ஊழல் குறித்து சிபிஐ விசாரணை தேவை: மு.க.ஸ்டாலின்

DIN

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைபெற்றுள்ள நிலக்கரி ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2012-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டுக்குள் தரம் குறைந்த நிலக்கரியை அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்து ரூ.3 ஆயிரத்து 25 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக தில்லி உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தொடர்ந்த வழக்கில் ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 
இந்தோனேஷியாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை, அந்த நாட்டின் துறைமுகங்களில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்தாலும், சிங்கப்பூர், துபாய், ஹாங்காங், பிரிட்டிஷ் தீவுகள் மூலம் இறக்குமதி செய்யப்பட்டதாக அந்நாட்டில் உள்ள இடைத்தரகர்கள் மூலம் ரசீதுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தோனேஷியாவில் உள்ள நிலக்கரி விலையைவிட இந்த இடைத்தரகர்கள் நிர்ணயித்த விலை 50 முதல் 100 சதவீதம் வரை அதிகம். இந்தத் தரமற்ற நிலக்கரி இறக்குமதியில், அசல் ரசீதுக்கு பதில் நகல்கள் மட்டுமே சுங்க அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளன. இப்படி, இறக்குமதி செய்யப்பட்ட 40 முன்னணி இறக்குமதியாளர்கள் பற்றி விசாரித்து வருவதாக மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மத்திய வருவாய் புலனாய்வுத்துறை விசாரிக்கும் 40 இறக்குமதியாளர்களில், தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.12 ஆயிரத்து 250 கோடி மதிப்பிலான நிலக்கரியை, ஐந்து பேரிடமிருந்து இறக்குமதி செய்துள்ளது. அந்த இறக்குமதியில்தான் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது.
மக்களின் தலையில் ரூ.14 ஆயிரம் கோடி மின்கட்டணத்தைச் சுமத்தி, மின்வாரியத்தை நஷ்டத்தில் மூழ்க வைத்துள்ள அதிமுக ஆட்சியில், 2012 முதல் 2016 வரை இருந்த மின்வாரியத் தலைவர்களும், அமைச்சர்களும், முதல்வராக இருந்தவர்களும் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளனர் என்பது தற்போது வெளிவந்துள்ளது. 
எனவே, தில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்காகக் காத்திராமல், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து, உடனடியாக சிபிஐ விசாரணை நடத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

ஆவேஷம் ரூ.150 கோடி வசூல்!

அன்பே அன்னா..!

SCROLL FOR NEXT