தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யம்: கமல்ஹாசனின் புதிய கட்சி

DIN

நடிகர் கமல்ஹாசன் தனது புதிய கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் பெயரை மதுரையில் புதன்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.
தனது அரசியல் பயணத்தை ராமேசுவரத்தில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து அவர் தொடங்கினார். அவர் படித்த ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து சாலையில் இருந்தபடியே பள்ளிக் குழந்தைகளைப் பார்த்து கையசைத்தார்.
அதைத்தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்களைச் சந்தித்து பேசினார். பிறகு கலாமின் நினைவு இடத்தில் அவரது சமாதிக்கு மாலை அணிவித்து மலர்தூவி வணங்கினார். அங்கிருந்து பயணத்தை தொடர்ந்த அவருக்கு ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை ஆகிய இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து பொதுமக்களிடையே சிறிது நேரம் பேசினார்.
அதன் பின்னர் மதுரை யா.ஒத்தக்கடையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு இரவு 7.30-க்கு வந்தார். அவரது இயக்கத்தின் மாவட்டச் செயலர்கள் வரிசையாக நின்று வரவேற்க கட்சிக் கொடியை ஏற்றினார். பின்னர் தனது கட்சியின் பெயரை 'மக்கள் நீதி மய்யம்' என்று அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:
நமது கட்சி மக்களின் கட்சி. அதில், நான் ஒரு கருவி மட்டுமே. நமக்கு நிறைய கடமைகள் இருக்கிறது. இன்றைய நிகழ்வுகள் ஒருநாள் கொண்டாட்டம் அல்ல. இந்த சந்தோஷத்துடன் நிறுத்திவிடக்கூடாது. வாழ்க்கை நடைமுறையைப் போன்று கடைப்பிடிக்க வேண்டும். நமக்கு மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் நாம் எடுத்துக்காட்டாகவும் முன்மாதிரியாகவும் இருக்க வேண்டும். 
நான் அறிவுரை கூறும் தலைவன் அல்ல. உங்களிடம் அறிவுரையைக் கேட்கப் போகிறவன். நாம் ஒன்றுகூடி சமைக்கப்போகும் மக்கள் ஆட்சியின் ஒரு பருக்கை சோறுதான் இங்கு திரண்டுள்ள கூட்டம். இதை தொட்டுப் பார்க்க நினைத்தால் ஊழல் படிந்த விரல்களை சுட்டுவிடும். இத்தனை ஆண்டுகள் நாம் செய்த நற்பணிகளின் காரணமாக நல்லோர் பலரது ஆசி கிடைத்திருக்கிறது. அதை கட்டிக்காப்பாற்ற வேண்டும்.
நமது கட்சிக்கு எங்கிருந்து நல்ல விஷயங்கள் கிடைக்கிறதோ அவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ளும். அதற்காக யார் பக்கமும் ஒரே அடியாகச் சாய்ந்துவிடாது. தராசு முள் போல நிற்கும். எனது 63 வயதில் அரசியலுக்கு வருவதை ஆயுள் முடியப் போகும் நிலையில் வருவதாக விமர்சனம் செய்கின்றனர். இதுவரை திரை நட்சத்திரமாக இருந்த காலத்தில் நடிப்பில் மூலம் பணம் சம்பாதித்தேன். ரசிகர்களாகிய நீங்கள் பணம் கொடுத்து திரைப்படங்களை ரசித்தீர்கள். அதற்காக இதுவரை உங்களைப் பார்த்து கை அசைத்தது மட்டுமே உங்களுக்காகச் செய்தது. நீங்கள் வைத்திருக்கும் அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று குற்ற உணர்வு அதிகரிக்க ஆரம்பித்தது. எஞ்சிய வாழ்க்கையை உங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கட்சியைத் தொடங்கியுள்ளேன். இதற்காக நாம் அமைத்துள்ள கட்டமைப்பு அடுத்த 3 அல்லது 4 தலைமுறைகளுக்கு நிலைத்து நிற்கும். எனக்கே எனக்கானதாக கட்சியை எடுத்துக் கொள்ளப் போவதில்லை. அவ்வாறு தொடருவதே நாளை நமதாக வழிவகுக்கும்.
கட்சியின் கொள்கை என்ன என்று பலரும் கேட்கிறார்கள். சிறப்பான ஆட்சியைக் கொடுத்து கொண்டிருக்கும் தலைவர்களின் கொள்கைகள் தான் எனது கொள்கைகள். தரமான கல்வி, ஜாதி-மதம் இல்லாத ஆட்சி, ஊழல் இல்லாத நிர்வாகம், கல்வியை அரசே ஏற்று நடத்துதல், இலவசங்களை எதிர்பார்க்கும் நிலையை மாற்றி, வேலைவாய்ப்புகளை உருவாக்கி பிறருக்கு உதவுபவர்களாக மாற்றுவது, காவிரி நதிநீர் பிரச்னைக்குத் தீர்வு, அண்டை மாநிலங்களுடன் சுமுக உடன்பாடு, ஒருவரே முதல்வர் பதவியில் நீடிக்கும் முறை இல்லாதது போன்றவை எங்களது கட்சியின் முக்கிய கொள்கைகள். இவ்வளவு தானா எனக் கேட்பவர்களுக்கு பக்கம் பக்கமாக தயாராகிக் கொண்டிருக்கிறது. அவை விரைவில் வெளியிடப்படும் என்றார் கமல்ஹாசன்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், அம்மாநில சட்டப்பேரவை உறுப்பினர் சோம்நாத் பார்தி, விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் பேரன் ஷேக் சலீம் உள்ளிட்டோர் பேசினர்.

கமல்ஹாசனுக்கு வாக்களித்தால் தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி மலரும்: கேஜரிவால்
தமிழக மக்களே வணக்கம் என்று தமிழில் தனது உரையைத் தொடங்கிய தில்லி முதல்வர் கேஜரிவால் பேசியதாவது:
தமிழக மக்கள் தற்போது மாற்றத்தை விரும்புகின்றனர். கமல்ஹாசன் ஒரு நல்ல நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர். திரைப்பட ஆளுமையான அவரின் ரசிகராக இருந்தேன். தற்போது இந்த மேடையில் அவர் நிஜ கதாநாயகனாக உள்ளார். தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்படுகிறார். களத்தில் போராடும் நிஜ நாயகனான அவரது நேர்மை, தொலைநோக்குப் பார்வை பிடித்துள்ளது. கடந்த சில மாதங்களாக அநீதிக்கு எதிராகப் பேசும் அவரது தைரியம், அவரது விசிறியாக என்னை மாற்றியுள்ளது.
கமல்ஹாசனின் கட்சிக்கு ஆதரவளிப்பதன் மூலம் தில்லி மக்களின் சாதனையை தமிழக மக்கள் முறியடிக்க வேண்டும். தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் உள்ளன. அவை இரண்டும் ஊழல் கட்சிகள். தற்போது நேர்மையான கமல்ஹாசனின் கட்சிக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை தமிழக மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நிதிக்கும், பணத்திற்கும் இங்கு பஞ்சம் இல்லை. நேர்மைக்கு தான் இங்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. எனவே நேர்மையான, ஊழலற்ற ஆட்சியை விரும்பும் மக்கள் கமல்ஹாசனின் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

நடிகர் கமல்ஹாசன் சொல்வது யாருக்கும் புரியவில்லை. அவரது பேச்சும் ஆக்கப்பூர்வமாக இல்லை. நிச்சயமாக இந்த காகித பூ மணம் வீசாது. மலரவும் மலராது. விதைகூட மரபணு மாற்றப்பட்ட விதை. இந்த விதை யாருக்கும் பயன்படாத விதை- ஜெயக்குமார்

தமிழகத்தில் போட்டியால் அவசரமாக கமல் கட்சி தொடங்குகிறார். அவரது கட்சி தலைப்புச் செய்தியாக இருக்கலாம். 
ஆனால், கமலால் தலைவராக உருவாக முடியாது. கமலின் கட்சி தொடக்கம் என்பது ஒரு திரைப்படத்தின் ஆடம்பர ரிலீஸ் போன்று இருக்கிறது.- தமிழிசை

இணைந்த கைகள் என்ன சொல்கிறது?
'மக்கள் நீதி மய்யத்தின்' கொடி வெண்மை நிற பின்னணியில் 6 இணைந்த கைகள் போலவும், நடுவில் நட்சத்திரத்துடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொடியின் வடிவமைப்புக்கு கமல்ஹாசன் அளித்த விளக்கம்:
கொடியில் இடம்பெற்றுள்ள 6 கைகள், தென்மாநிலங்கள் 6-யையும் குறிக்கும். அதை உற்றுநோக்கினால், 6 மாநிலங்களின் வரைபடம் தெரியும். நடுவில் இருக்கும் நட்சத்திரம் மக்கள் சக்தியை குறிக்கும் என்றார். 

கொள்கைகள்...
1. அனைவருக்கும் தரமான கல்வி போய்ச் சேர வேண்டும்.
2. ஜாதி, மதங்களை சொல்லி விளையாடப்படும் விளையாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும்.
3. ஊழல் இல்லாத நிர்வாகம் மலர வேண்டும்.
4. நீதிக்கட்சி போன்ற பெரியகட்சிகளின் அறிவுரை, கொள்கைப்படி செயல்படுதல்.
5. வலதுசாரி, இடதுசாரி என இல்லாமல் நல்ல கருத்துக்கள் யாரிடம் இருந்து வந்தாலும் தராசு முள்போல நடுநிலையாக இருந்து மக்களுக்காக ஏற்றுக்கொண்டு, மக்கள் நலனுக்கு ஏற்ப செயல்படுதல்.
6. கல்வி நிறுவனங்களை அரசே ஏற்று நடத்தல்.
7. ஆரம்பக்கல்வி முதல் குழந்தைகளுக்கு தமிழ் போதிக்கப்படும். வேற்று மொழிகள் மீது வெறுப்பு காட்டப்படாது.
8. ஸ்கூட்டர் போன்ற இலவசங்களை மக்கள் பெறும் நிலையை மாற்றி, அவர்களே பிறருக்கு உதவும் வகையில் அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.
9. கிராமப்புற மேம்பாடுகளில் கவனம் செலுத்துதல்.
10. நியாயமான பேச்சுவார்த்தைகள் மூலம் அண்டை மாநிலங்களில் இணக்கமான சூழ்நிலைகளை ஏற்படுத்தி நதிநீர் உள்ளிட்ட பிரச்னைகளைத் தீர்த்தல்.
ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் மற்றும் ஒருவரே ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்கும் தன்மை இல்லாத நிலையை ஏற்படுத்துதல் ஆகியவற்றை கட்சியின் கொள்கைகளாக தனது பேச்சில் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT