தமிழ்நாடு

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடி: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டு

DIN

உடல் உறுப்புகள் தானத்தில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக விளங்குவதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டினார்.
ஆயிரம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொண்ட கிளெனீகிள்ஸ் குளோபல் மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவு தலைவரும், இயக்குநருமான டாக்டர் முகமது ரேலா உள்ளிட்ட மருத்துவக் குழுவினர், தலைவர் டாக்டர் கே.ரவீந்தரநாத் ஆகியோருக்கு பாராட்டு விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கலந்து கொண்டு டாக்டர்கள் முகமது ரேலா, கே.ரவீந்தரநாத், மருத்துவக் குழுவினர் ஆகியோருக்கு விருது வழங்கி பேசியது:
சென்னையில் கடந்த 2009 -இல் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை இதுவரை 1,000 கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.உறுப்பு மாற்று சிகிச்சை என்பது மரணத்தின் பிடியில் உள்ளவருக்கு மறுவாழ்வு தரும் ஓர் உன்னதமான சேவையாகும். மேலும், கடந்த 2017 -இல் கல்லீரல் பாதிப்பினால் நிகழும் குழந்தைகளின் இறப்பு விகிதம் பூஜ்யம் சதவீதத்தை அடைந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 250 கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகள் செய்துள்ள மருத்துவர்கள் முகமது ரேலா உள்ளிட்ட மருத்துவக் குழுவினரின் பணி பாராட்டுக்குரியது.
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடி: உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. இதுகுறித்து மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தமிழக அரசின் பணி பாராட்டத்தக்கது. 
கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும் வகையில், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் கிளெனீகிள்ஸ் குளோபல் மருத்துவமனை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது பாராட்டத்தக்கது. இந்தப் பங்களிப்பின் மூலம் ஏழை மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைக்க வழிவகுக்கும். 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் வரை கல்லீரல் பாதிப்புக்குள்ளானவர்கள் உள்ள நிலையில், நம் நாட்டில் ஆண்டுக்கு 1,500 கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மட்டுமே செய்யப்படுகிறது. உறுப்பு தானம் குறித்து பொதுமக்களிடம் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட வேண்டும்.
கல்லீரல் நோய் பாதிப்புக்குள்ளாகும் இளைஞர்கள்: போதிய உடல் உழைப்பு இல்லாதது, முறையற்ற உணவுப் பழக்கம், மது உள்ளிட்ட காரணங்களால் அதிக அளவிலான இளைஞர்கள் கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டு வருவது கவலை அளிப்பதாக உள்ளது. சரியான உணவு, வாழ்க்கை முறை மாற்றம், உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்த நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்றார் அவர்.
இந்த விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், டி.ஜெயக்குமார், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், உறுப்பு மாற்று சிகிச்சை மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நோய்கள் அற்ற சமுதாயமே இலக்கு: டாக்டர் முகமது ரேலா
நோய்கள் அற்ற சமுதாயமே இலக்கு என்று கிளெனீகிள்ஸ் குளோபல் மருத்துவமனை கல்லீரல் மாற்று சிகிச்சைப் பிரிவின் தலைவர் டாக்டர் முகமது ரேலா கூறினார்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பங்கேற்ற விருது நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ஏழை மக்களுக்கு இலவசமாக உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கும் வகையில், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம் 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தற்போது வரை 19 கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நோய்கள் அற்ற சமுதாயத்தை உருவாக்குவதுமே இலக்கு என்றார் டாக்டர் முகமது ரேலா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT