தமிழ்நாடு

உலகுக்கு ஆன்மிகத்தைக் கற்றுக் கொடுத்தது இந்தியா: சுவாமி கௌதமானந்த ஜி மகராஜ் பெருமிதம்

DIN

உலகுக்கு அறிவியல் கலந்த ஆன்மிகத்தை கற்றுக் கொடுத்தது இந்தியா என்ற பெருமையுடன் அனைவரும் செயல்பட வேண்டும் என ராமகிருஷ்ண மடத்தின் அகில உலக துணைத் தலைவர் சுவாமி கௌதமானந்த ஜி மகராஜ் தெரிவித்தார்.
சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் 9-ஆவது ஹிந்து ஆன்மிக,சேவைக் கண்காட்சியின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு டி.வி.எஸ். மூலதன நிதிகள் லிமிடெட் தலைவர் கோபால் சீனிவாசன் தலைமை வகித்தார்.ஹிந்து சேவை, ஆன்மிக அமைப்பின் அறங்காவலர் ர.ராஜலட்சுமி வரவேற்றார். பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
இதில் கலந்து கொண்ட ராமகிருஷ்ண மடத்தின் அகில உலக துணைத் தலைவர்சுவாமி கௌதமானந்த ஜி மகராஜ் பேசியதாவது: உலகில் உள்ள அனைத்து மதங்களும் அன்பைத் தான் போதிக்கின்றன. உண்மையைப் பேசுவது, உதவி செய்வது, பிறரிடம் அன்பு செலுத்துவது ஆகிய முக்கியப் பண்புகளை ஹிந்து மதம் போதிக்கிறது. இந்த மூன்றையும் கடைப்பிடித்தால் உலகத்தில் தற்போது நடைபெற்று வரும் பெருமளவு பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும். மேலும், பிறருக்கு உதவுவதன் மூலம் கடவுளை உணரலாம்.
உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் மனித குலத்துக்குத் தேவையான ஒவ்வொரு விஷயத்தைக் கற்றுக் கொடுத்துள்ளன. அதில், அறிவியல் கலந்த ஆன்மிகத்தை இந்தியா தான் உலகுக்கு கற்றுக் கொடுத்துள்ளது. இந்தியாவும், ஆன்மிகமும் ஒன்றுடன் ஒன்று கலந்ததாகும். இதைப் பிரிக்கவே முடியாது. மாணவர்களுக்கும், குழந்தைகளுக்கும் நமது நாட்டின் உண்மையான வரலாறு, ஆன்மிகம் குறித்து போதிக்க வேண்டும். அறிவியல், தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வியை மாணவர்களுக்குப் போதிக்க வேண்டும். இதன் மூலம் அறியாமையும், வறுமையும் ஒழியும். இவை ஒழிந்தால் நமது நாடு தானாக முன்னேறும் என்றார்.
ஹிந்து மதத்தை கட்டாயப் பாடமாக்க வேண்டும்: முன்னதாக ஹிந்து ஆன்மிக, சேவைக் கண்காட்சியின் தலைவர் சுவாமி ஓம்காரனந்தா பேசியதாவது: அண்மைக்காலமாக ஹிந்து மதம் குறித்து பல தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. இதைத் தடுக்க வேண்டுமானால் ஹிந்து மதத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக ஹிந்து உள்ளிட்ட அனைத்து மதங்களையும் பள்ளி, கல்லூரிகளில் கட்டாயப் பாடமாக்க வேண்டும். 
ஹிந்து மாணவர்கள், இளைஞர்கள் நமது மதம் குறித்த நூல்களைப் படித்து அதில்ஆழ்ந்த அறிவைப் பெற வேண்டும்.நமக்குள் ஜாதி உள்ளிட்ட பல பிரிவுகள் இருக்கலாம். ஆனால், அது பிரிவினையாக மாறிவிடக் கூடாது. நாம் ஒற்றுமையாக இருப்பதே நமக்கு மிகப் பெரிய பலமாகும். வரும் தேர்தலில் ஹிந்துக்களின் பலத்தை நாம் உணர்த்த வேண்டும் என்றார்.
அன்பே கடவுளை அடையும் வழி: இதைத் தொடர்ந்து, பௌத்த மதத் தலைவர் யோங்கே மிங்க்யூர் ரின்போச்சே பேசியதாவது: மனிதனின் மதம் என்பது பல சிந்தனைகளால் சூழப்பட்டதாகும். பிறருக்கு செய்யும் உதவியும், பிறரிடம் காட்டும் அன்பு மட்டுமே கடவுளை அடைய வழியாகும். தியானத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உடல் நலத்துடன் இருப்பதுடன் உள்ளமும் புத்துணர்ச்சி அடையும். அதன் மூலம் சமூகமும் அமைதியாக இருக்கும் என்றார்.
இந்த விழாவில், ஜைன சமயத் தலைவர் ஜைன பிரமுக் சமானி ஸ்ரீநிதிஜி, ராஷ்டிரிய சீக்கிய சங்கத்தின் தேசியத் தலைவர் குர்சரண் சிங் கில், கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.குருமூர்த்தி, குருநானக் கல்லூரியின் தாளாளர் மஞ்ஜித் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தீர்த்த யாத்திரை: தொடக்க விழாவின் முன்னதாக, நதி நீர் இணைப்பை வலியுறுத்தும் வகையில் கங்கா-காவிரி தீர்த்த கலச யாத்திரை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் நடைபெற்றது. இதில், வடஇந்தியப் பெண்கள் கலந்து கொண்டு வேளச்சேரி தண்டீஸ்வரர் கோயிலில் இருந்து குருநானக் கல்லூரி வரை தீர்த்தக் குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர்.
400 அரங்குகள்
சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி வளாகத்தில் 9-ஆவது ஹிந்து ஆன்மிக,சேவைக் கண்காட்சி புதன்கிழமை (ஜன.24) முதல் திங்கள்கிழமை (ஜன.29) வரை நடைபெற உள்ளது. 
இதில், ஹிந்து மதத்தை விளக்கும் வகையில்ஆன்மிகவிளக்க புத்தகங்கள் உள்ளிட்ட 400 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், இந்தியாவில் உள்ள பல்வேறு அமைப்பினர் அரங்குகளை அமைத்துள்ளனர். கண்காட்சி வளாகத்தில் புதன்கிழமையன்று (ஜன.24) காலை 10 மணிக்கு பெண்மையைப் போற்றும் 'கன்யா வந்தனம்' மற்றும் சுவாசினி வழிபாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT