தமிழ்நாடு

ஆட்கள் மூலமான நாற்று நடவுக்கும் மானியம் வழங்கப்படுமா?: விவசாயிகள் எதிர்பார்ப்பு

DIN

இயந்திரம் அல்லாமல் ஆட்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நாற்று நடவுக்கும் குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் மானியம் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் முன்வைக்கின்றனர்.
டெல்டா மாவட்டங்களில் காவிரி நீர் வராத நிலையில், ஆழ்குழாய் மூலம் குறுவை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாகத் தமிழக அரசுக் குறுவை சாகுபடித் தொகுப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதில், பல்வேறு உதவிகள் வழங்கப்படும் நிலையில், இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்படும் நடவுக்கு ஏக்கருக்கு ரூ. 4,000 மானியம் என்பதை பிரதானமானதாக விவசாயிகள் கருதுகின்றனர். 
தஞ்சை மாவட்டத்தில் இந்த மானியம் 35,000 ஏக்கருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்டத்தில் குறுவை சாகுபடி எதிர்பார்க்கப்படும் 87,500 ஏக்கரில் 40 சதவீத பரப்பளவுக்கு மட்டுமே இந்த மானியம் கிடைக்கும் நிலை உள்ளது. இதில், முன்பட்ட குறுவை சாகுபடியைத் தொடங்கிய விவசாயிகளுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை.
மேலும், பெரும்பாலான பகுதிகளில் விவசாயத் தொழிலாளர்கள் மூலம் கையால் நாற்று நடவு செய்யும் வழக்கமே அதிகம். ஆனால், இத்திட்டத்தில் இயந்திரம் அல்லாமல், ஆட்கள் மூலம் நடவு செய்யும் விவசாயிகளுக்கு மானியம் அறிவிக்கப்படவில்லை. எனவே, இத்திட்டத்தால் பெரும்பாலான விவசாயிகளுக்குப் பயனில்லாத நிலையே உள்ளது.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கக் கெளரவத் தலைவர் நெடார் எஸ். தர்மராஜ் கூறியது:
இயந்திர நடவைப் பொருத்தவரை மணல் சார்ந்த பகுதியில்தான் சாத்தியமானது. ஆனால், தஞ்சை மாவட்டத்தைப் பொருத்தவரை களி மண் சார்ந்த பகுதிகளே அதிகம். எனவே, இப்பகுதியில் இயந்திர நடவுக்கு சாத்தியமில்லாத நிலையில் ஆட்கள் மூலம் கையால் நாற்று நடவு செய்வதற்கு மானியம் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
குறுவை தொகுப்புத் திட்டத்தில் நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க அரசு ரூ. 24 கோடி ஒதுக்கீடு செய்திருந்தாலும், அதைச் செயல்படுத்தும் முறை குறித்து தெளிவாக அறிவிக்கப்படாததால், விவசாயத் தொழிலாளர்கள் மத்தியில் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில், இயந்திர நடவு முறைக்கு மட்டுமே மானியம் என்பதால், விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், விவசாயத் தொழிலாளர்களுக்கும் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஏராளமான விவசாயத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர் என்றார்.
இதுகுறித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலர் கே. பக்கிரிசாமி கூறியது: கை நடவு மூலம் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். இதற்கு மானியம் வழங்கினால், விவசாயிகள் மட்டுமல்லாமல், விவசாயத் தொழிலாளர்களும் பயனடைவர். விவசாயத் தொழிலாளர்கள் மூலம் நடவு செய்தால் ஒரு ஏக்கருக்கு 15 முதல் 18 பேர் தேவைப்படுவர். நூறு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 1,500 பேர் வேலை செய்வர். ஒரு ஆளுக்கு ரூ. 200 கூலி என்றாலும் கூட, இதன் மூலம் ஒரு கிராமமே பயன் பெறும். ஆனால், இயந்திர நடவு செய்தால், இயந்திர உரிமையாளர்கள் நான்கைந்து பேர் மட்டுமே பயனடைவர். இவர்களும் பெரும்பாலும் வெளியூரைச் சேர்ந்தவர்களாக இருப்பர் என்றார் அவர்.
நெல் சாகுபடியில் ஏக்கருக்கு ரூ. 25,000 முதல் ரூ. 30,000 வரை செலவாகிறது. இதில் நடவுக்கான செலவு அதிகரித்து வருகிறது. கையால் நடவு செய்வதற்கும் மானியம் அறிவிக்கப்பட்டிருந்தால் சாகுபடி செலவில் ஓரளவுக்கு மிச்சப்படுத்தலாம் என விவசாயிகள் கருதுகின்றனர். எனவே, குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் பாகுபாடு இல்லாமல், கையால் மேற்கொள்ளப்படும் நடவுக்கும் மானியம் வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT