தமிழ்நாடு

போலீஸாருக்கு வார விடுமுறை: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

DIN

போலீஸாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்குவது குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
போலீஸாரின் பணிச் சுமை தொடர்பாக வழக்குரைஞர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், காவலர்களின் குறைகளைத் தீர்க்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மனநல மருத்துவர்கள் உள்ளிட்ட பல்துறை நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2012-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அண்மைக் காலங்களில் அதிகரித்து வரும் காவலர்களின் தற்கொலைகளைக் கருத்தில் கொண்டு கடந்த 2012-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரியிருந்தனர். 
இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி என்.கிருபாகரன் போலீஸாருக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை வழங்குவது தொடர்பாக கேள்வி எழுப்பி தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
ரூ.200 கூடுதல் ஊதியம்: இந்த மனு மீண்டும் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன், காவல் துறை நிலை உத்தரவின் அடிப்படையில் போலீஸாருக்கு வார விடுமுறை அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. வார விடுமுறை எடுக்காமல் பணிக்கு வரும் போலீஸாருக்கு கூடுதல் ஊதியமாக ரூ.200 வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாள்கள் விடுமுறை அளிக்கப்படும் நிலையில், போலீஸாருக்கு ஏன் சுழற்சி முறையில் ஒருநாள் விடுமுறை அளிக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பினார். மேலும், ஆவணங்களில் மட்டுமே உள்ள போலீஸாருக்கான வார விடுமுறையை, நடைமுறைப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? காவல்துறையில் பிற பணிகளில் ஈடுபடும் காவலர்கள் வாரத்தில் ஒரு நாள் தங்களது குடும்பத்தினருடன் செலவிட அனுமதிக்க வேண்டும். காவல் துறையினர் நல ஆணையம் குறித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு எந்த அளவில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
மேலும், பணிக்கு வரும் காவலர்களுக்கு ரூ.200 வழங்கப்படும் விதியை மாற்ற முடியுமா என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூலை 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT