தமிழ்நாடு

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு

DIN

போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னைகளை தீர்க்காமல், அரசு காலதாமதம் செய்வதாகக் கூறி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 10 சங்கங்களின் சார்பில் வேலை நிறுத்த அறிவிப்பு ஏற்கெனவே கொடுத்திருந்த நிலையில், 13-ஆவது ஊதிய ஒப்பந்த 2-ஆம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
இந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலத்துறை சிறப்பு தனி இணை ஆணையர் சாந்தி, போக்குவரத்துத் துறையின் 5 மண்டல மேலாண் இயக்குனர்கள், தொழிற்சங்கங்கள் தரப்பில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ் உள்பட 10 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
தொழிற்சங்கங்கள் ஆலோசனை: இறுதியில் பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. அடுத்தக் கட்ட பேச்சு வார்த்தை நடத்துவது குறித்த தேதி குறிப்பிடாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக தொமுச அலுவலகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் தொமுச, சிஐடியு உள்பட 10 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
இதையடுத்து, அனைத்து தொழிற்சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் பிரச்னைகளை தீர்க்கும் நிலையில் அரசோ, அதிகாரிகளோ வரவில்லை. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி இதுவரை வழங்கப்படவில்லை. இது சம்பந்தமாக அடுத்தகட்ட சமரச நடவடிக்கையின்போது தெரிவிப்பதாகக் கூறினர். ஆனால் அடுத்தகட்ட சமரச நடவடிக்கை எப்போது என்று கூறவில்லை. அப்படி தெரிவிக்காததால் போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் தொடர்ந்து நீடித்துக் கொண்டே செல்லும்.
வேலைநிறுத்தப் போராட்டம்: மேலும் பல்வேறு வகைகளில் போக்குவரத்துக் கழகங்களை சீர்குலைப்பது, தனியார்மயத்தை நோக்கிச் செல்வது போன்ற நடைமுறைகளே அரசின் திட்டமாக உள்ளது. எனவே வேலை நிறுத்தம் என்பது தவிர்க்க முடியாதது.
இது குறித்து விவாதித்த பின்னர் வேலைநிறுத்த ஏற்பாட்டை தீவிரப்படுத்துவது என முடிவு செய்துள்ளோம். முதல் கட்டமாக வரும் 19-ஆம் தேதி (வியாழக்கிழமை) அனைத்து மண்டல தலைமையகங்களிலும் வேலைநிறுத்த விளக்க ஆர்ப்பாட்ட வாயிற் கூட்டங்கள் நடத்தப்படும். பின்னர், இம் மாதம் 27-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT