தமிழ்நாடு

ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நடவடிக்கை

DIN

தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட 7 புராதன சிலைகளை விரைவில் தமிழகத்துக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: தமிழக கோயில்களில் இருந்த பழைமை வாய்ந்த சிலைகள் கடத்தல் குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கோயில்களில் இருந்த பழைமையான சிலைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் அடங்கிய குழுவினர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் கேன்பேராவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் அண்மையில் ஆய்வு நடத்தினர். அதில், அந்தச் சிலைகள் தமிழகத்தில் இருந்து கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டது.
பேச்சுவார்த்தை: இதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள ஆஸ்திரேலிய தூதரக அதிகாரி சூசன் கிரஸ், ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியத்தின் துணை இயக்குநர் கிறிஸ்டியன் பாய்ஸ்லே தலைமையிலான அந்நாட்டு அதிகாரிகள் குழுவினருடன், தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. 
இதில், தமிழக அரசு சார்பில் அமைச்சர் க.பாண்டியராஜன், ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். 
இதில், ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் உள்ள 7 சிலைகளை ஒப்படைக்க அந்த நாட்டு அதிகாரிகள் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் சிலைகள் திருடப்பட்டதற்குரிய ஆவணங்களையும், கடத்தி விற்கப்பட்டதற்குரிய ஆவணங்களையும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் கேட்டிருந்தனர்.
7 சிலைகள் குறித்த தகவல்கள்: இதையடுத்து, நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி சாயாவனம் சிவன் கோயிலில் இருந்த 1300 ஆண்டுகள் பழைமையான ரூ.1.48 கோடி மதிப்பிலான நின்ற நிலையில் உள்ள குழந்தை சம்மந்தர் சிலை, மயிலாடுதுறை கொல்லுமாங்குடி கிராமத்தில் உள கைலாசநாதர் கோயிலில் இருந்த 900 ஆண்டுகள் பழைமையான நந்தி கல் சிலை, 1100 ஆண்டுகள் பழைமையான காளி சிலை, திருநெல்வேலி மாவட்டம், ஆத்தாலநல்லூர் மூன்றிஸ்வர உடையார் சிவன் கோயிலில் இருந்த 1200 ஆண்டுகள் பழைமையான ரூ. 4.98 கோடி மதிப்பிலான 2 துவாரபாலகர்கள் சிலைகள், தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே உள்ள மானம்பாடி கிராமத்தில் நாகநாத சுவாமி கோயிலில் இருந்த 1000 ஆண்டுகள் பழைமையான ரூ. 4.59 கோடி மதிப்பிலான நடனமாடும் சம்மந்தர் சிலை, மானம்பாடி கிராமம் நாகநாத சுவாமி கோயிலில் இருந்த பழைமையான ரூ. 1.32 கோடி மதிப்பிலான ஆறுமுகம் கல் சிலை ஆகியவை குறித்த ஆவணங்களை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் வழங்கினர். இதையடுத்து, அந்தச் சிலைகளை ஆஸ்திரேலிய அதிகாரிகள் விரைவில் ஒப்படைப்பார்கள் என தெரியவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT